எம்ஜிஆரை மீண்டும் சீண்டிய துரைமுருகன்…! கொந்தளிக்கும் அதிமுக
Author: Babu Lakshmanan17 November 2021, 6:26 pm
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எம்ஜிஆரை மேற்கோள்காட்டி அவர் பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
அதிமுக தரப்பிலும், எம்ஜிஆர் அபிமானிகள் சார்பிலும் எதிர்ப்பு கிளம்பியதும் சில வாரங்கள் அப்படியே சைலன்ட் ஆகிவிடுவது அவருடைய வாடிக்கை.
எம்ஜிஆர் குறித்து சர்ச்சை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, “அண்ணா காலத்தில் சம்பத்தை பார்த்தோம். கருணாநிதி காலத்தில் எம்ஜிஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளையும் பார்த்தோம். அதனால் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் யாராவது துரோகம் செய்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் 24 மணி நேரத்தில் நானே கட்டம் கட்டி விடுவேன்” என்று எச்சரித்து பேசியது அதிமுக தலைமையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எம்ஜிஆரை, துரை முருகன் குறை கூறியிருக்கிறார். அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதற்கு எம்ஜிஆர்தான் காரணம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.
எம்ஜிஆர் மரணமடைந்து 34 ஆண்டுகளாகியும் அவரை தேவையின்றி துரைமுருகன் மீண்டும் மீண்டும் இப்படி சீண்டுவது அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
தவறான குற்றச்சாட்டு
இதுபற்றி அவர்கள் கூறும்போது 1979-ல் நடந்த ஒரு துயர சம்பவத்தையும் சுட்டிக் காட்டினர்.
“1979 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள மாச்சு-2 என்னும் அணையின் ஒரு பகுதியில் பெரும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் தொழில் நகரான மோர்பியில் வெள்ளம் புகுந்து 25 ஆயிரம் பேர் பலியாயினர்.
வேதனை மிகுந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து,கேரள நாளிதழ் ஒன்று 155 அடி உயர முல்லைப் பெரியாறு அணையும் பலவீனமாக உள்ளது. அணை இடிந்தால் இடுக்கி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி விடுவார்கள் என்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து அப்போதைய கேரள அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142.2 அடியாகவும் பின்னர் 136 அடியாக குறைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது. இது தொடர்பாக
முல்லைப்பெரியாறில் ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணையம், அணையை பலப்படுத்திய பின்பு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசை அறிவுறுத்தியது.
இதைத்தான் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டுவிட்டார். அவருடைய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை தற்போது துரைமுருகன் கூறுகிறார். இந்திய அணை ஒன்றால் மிகப்பெரிய சோகம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில்தான் மத்திய நீர்வள ஆணையத்தின் அறிவுறுத்தலை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது என்பதை துரைமுருகன் தனக்கு வசதியாக மறைத்துவிட்டார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அணையைப் பலப்படுத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டது.
ஆனால் அணையை தமிழக அரசு பலப்படுத்த முடியாத வகையில் கேரள அரசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முட்டுக் கட்டை போட்டது. ஆனால் அதையெல்லாம் அம்மாவின் அரசு முறியடித்தது.
அணை பலப்படுத்தப்பட்டதன் அடிப்படையில்தான் 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியாறில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது.
இப்படி பல ஆண்டுகள் முல்லை பெரியாறில் சட்ட ரீதியாக அதிமுக அரசு போராடி பெற்றுத் தந்த உரிமையைத்தான் தற்போது திமுக அரசு கோட்டை விட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டதை சோற்றுக்குள் முழு பூசணிக்காயை மறைப்பது போல எம்ஜிஆர் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார், துரைமுருகன்.
பச்சைத் துரோகம்
1979க்குப் பின்னர் 1989,1996, 2006 என மூன்று முறை கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது. அப்போதெல்லாம் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு
ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற ஆதரவு தெரிவித்தது, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
அதனால்தான் 2014-ல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கருணாநிதி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்திற்கு செய்தது பச்சைத் துரோகம் என்று கடுமையாக விமர்சித்தார். “நான் ஜெயலலிதாவை எதிர்ப்பவன் என்றாலும்கூட இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக தமிழகத்திற்கு வெற்றி தேடிக் கொடுத்தவர் ஜெயலலிதாதான்” என்றும் அவர் பாராட்டி இருந்தார்.
எனவே இதில் ஏதாவது, சந்தேகம் இருந்தால் தனது கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கேட்டு துரை முருகன் தெரிந்து கொள்வது நல்லது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இதுவரை எம்ஜிஆர் பெயரை துரைமுருகன் இழுத்தது கிடையாது. புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தவரை இதுபற்றி அவர் பெரிய அளவில் பேசவும் இல்லை.
இப்போது எம்ஜிஆர் உயிருடன் இல்லாததால் அவரைப் பற்றி என்ன சொன்னாலும் இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து, துரைமுருகன் புழுதிவாரி தூற்றுகிறார். எம்ஜிஆர் தயவால் 6 வருடங்கள் உயர்கல்வி படித்து சட்டப் படிப்பில் பட்டமும் பெற்றவர், இப்படி வேண்டுமென்றே பழி சுமத்துவதை எம்ஜிஆரின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
பறிகொடுத்தது யார்..?
கடந்த 30-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையை தமிழக அமைச்சர்கள்,தேனி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஏன் திறக்கவில்லை என்ற கேள்விக்கு இதுவரை துரைமுருகனிடம் இருந்து
எந்த தெளிவான பதிலும் இல்லை.
அணையின் நீர்மட்டத்தை 2021 நவம்பர் 11ம் தேதி வரை 139.5 அடியாக வைத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில் அதை ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. தமிழக அரசின் அதிகாரத்தை கேரளாவிடம் பறிகொடுத்தது பற்றி மூச்சு விடாமல் அவர் மழுப்பவே செய்கிறார்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று கேட்டு துரைமுருகன் பிரச்சனையை திசை திருப்புகிறார்.
2024 தேர்தலில் துணைப் பிரதமர் பதவிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை நிறுத்த பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு ஆதரவு அளிக்கலாம் என்ற பேச்சு டெல்லியில் உள்ளது.
அதற்காகத்தான் தனது உரிமையை திமுக அரசு தற்போது கேரளாவிடம் அடமானம் வைத்துவிட்டதோ?” என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கேள்வியும் எழுப்பினர்.
0
0