தலைநகரம் திருச்சிக்கு மாறுகிறதா….? துரைமுருகனால் பதறும் திமுக… பிரச்சனைகளை திசை திருப்புகிறாரா…?

Author: Babu Lakshmanan
29 November 2023, 9:27 pm
Quick Share

அமைச்சர் துரைமுருகன் பொதுவெளியில் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உள்ளாகிவிடுவது உண்டு. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரை முதலமைச்சர் ஸ்டாலின்
தனிப்பட்ட முறையில் மற்ற அமைச்சர்களை கண்டிப்பதுபோல் அதிகமாக கடிந்து கொள்வதில்லை என்பதும் தெரிந்த விஷயம்.

இந்த நிலையில்தான் அமைச்சர் துரைமுருகன், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சியில் நடந்த திமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் பேசும்போது அந்த மாவட்டத்தில் இன்னொரு அமைச்சரான அன்பில் மகேசை வெகுவாக புகழ்ந்து தள்ளியதுடன் அரசியல் வட்டாரத்தினர் மட்டுமின்றி தமிழக மக்களும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு புதிய தகவலையும் வெளியிட்டார்.

அவர் கூறுகையில் “கருணாநிதியின் ரத்தத்தில் உருவானது இந்தக் கொடி. கருணாநிதி பிறந்த ஊர் திருக்குவளை முந்தைய தஞ்சை மாவட்டத்தில் இருந்தாலும், தலைமை மாவட்டம் திருச்சிதான். திமுகவுக்கே திருச்சி மாவட்டம்தான் கேப்டன். இந்தக் கட்சி ஆட்சிக்கு போகலாம் என்று, ‘பர்மிஷன்’ கொடுத்த மாவட்டமே திருச்சிதானே?திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று எம்ஜிஆர்., கருதினார். எனக்கு அதிமுக பிடிக்காவிட்டாலும், அந்தக் கருத்து பிடித்திருக்கிறது.

தலைநகர் டில்லி ரொம்ப தூரத்தில் இருப்பதால், அவர்கள் நமக்கு அன்னியனாக தெரிகின்றனர். இந்தியாவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருக்கவேண்டும். தமிழகத்தின் தலைநகர் மத்திய பகுதியில் இருக்கவேண்டும் என்றால், திருச்சிதான் சரியான இடம். யாராவது ஒரு ஆள் வருவான். நடக்காமல் இருக்காது; நிச்சயமாக அது நடக்கும்” என்று ஒரு போடு போட்டார்.

அமைச்சர் துரைமுருகன் இப்படி சொல்வதால் முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாகத்தான் கூறியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 40 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சராக எம்ஜிஆர் இருந்தபோதே திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்றுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அதனால்தான் எம்ஜிஆரை இந்த விஷயத்தில் தனக்கு பிடிக்கும் என்று துரைமுருகன் கூறுகிறார் என புரிந்து கொள்ளவும் முடிகிறது.

எம்ஜிஆர் அரசியல் மற்றும் அரசு நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தலைநகர் மாற்றம் குறித்த தனது விருப்பத்தை அவர் 1981 மார்ச் 15 ம் தேதி வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

அன்று திருச்சியை தமிழகத்தின் தலைநகரமாக்கும் திட்டத்தை அவர் அறிவிக்கவும் செய்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்க தீவிர முயற்சியும் எடுத்தார். சென்னையின் நெரிசலுக்கு திருச்சியை நிரந்தர தீர்வாக எம்ஜிஆர் கருதினார். மேலும் 1981-82ம் ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறையும் இத்திட்டத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

தவிர தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் சென்னையில் தலைமைச் செயலகம் மற்றும் பிற முக்கிய அரசு அலுவலகங்களுக்கு தெற்கு மற்றும் கொங்கு மண்டல பகுதிகளில் உள்ள மக்கள் வந்து அரசு அதிகாரகளை சந்தித்துவிட்டு செல்வது இன்றும் மிகச் சிரமமாக இருக்கிறது அதற்காக குறைந்த பட்சம் ஒரு 10 முதல் 14 மணி நேரம் வரை பஸ் அல்லது ரயில் பயணத்திற்காக அவர்கள் ஒதுக்கவேண்டியும் உள்ளது.

இந்த நடைமுறை சிக்கலை களையவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வந்து செல்லவும் மாநிலத்தின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக்க எம்ஜிஆர் விரும்பினார் என்பதுதான் உண்மை.

“ஆனால் அரசியல் ரீதியாக திமுக தரப்பில் இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னைதான் தலைநகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக கருணாநிதி பல்வேறு போராட்டங்களையும் அறிவித்து எம்ஜிஆருக்கு அதிர்ச்சியும் அளித்தார். இல்லையென்றால், தான் மரணம் அடைவதற்கு முன்பாகவே திருச்சியை தலைநகராக எம்ஜிஆர் மாற்றி இருப்பார்” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“சென்னையில் வறட்சி நிவாரணம், குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் செலவிடுவதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து திருச்சியை தலைநகராக்கிவிடலாம் என்று எம்ஜிஆர் 1981-ல் பரிந்துரைக்கவும் செய்தார்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சென்னையில் அதிமுகவுக்கு வலிமை இல்லை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் சென்னை நகரம் எம்ஜிஆருக்கு கை கொடுக்கவில்லை. அதனால்தான் அவர் திருச்சியை தலைநகராக மாற்ற விரும்புகிறார் என்று அப்போது கருணாநிதி கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.

அத்துடன் முன்பு தன்னிடம் வேளாண் துறை அமைச்சராக இருந்த தனது நெருங்கிய நண்பரான அன்பில் தர்மலிங்கத்தை தூண்டி விட்டு திருச்சி மாவட்டம் வேளாண் தொழில்கள் நிறைந்த பசுமை மாவட்டமாக இருக்கிறது. அதை எம்ஜிஆர் பாலைவனமாக்க முடிவு செய்து தமிழகத்தின் தலைநகராக மாற்றத்துடிக்கிறார் என்று விவசாயிகளிடையே கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியதாகவும் கூறுவார்கள்.
இது போன்ற பிரச்சாரம் சுமார் இரண்டு ஆண்டுகள் திருச்சி,
தஞ்சை மாவட்டங்களில் நீடித்தது.

இந்த நிலையில்தான் திடீரென எம்ஜிஆருக்கு உடல்நலம் பாதிப்படைந்தது. அப்போதைய அரசியல் சூழல், இந்திராகாந்தி படுகொலை, திடீர் தேர்தல் போன்ற காரணங்களாலும் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்பதுதான் நிஜம்!

ஆனால் இன்று சென்னை நகரில் ஒரு கோடிக்கும் நெருக்கமான அளவில் மக்கள் தொகை உள்ளது. சென்னையும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் மட்டுமே பெருமளவு தொழிற்சாலைகள் இருப்பதால் தமிழகத்தின் இதர பகுதிகளில் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டுமே குவிகின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்காக கூட திருச்சியை தலைநகராக்கும் முடிவுக்கு திமுக வந்திருக்கலாம். ஆனால் இதை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தினால் அன்று உங்கள் தந்தையுடன் சேர்ந்து நீங்களும்தானேதலைநகரை மாற்றக்கூடாது என்று எம்ஜிஆர் அரசுக்கு நெருக்கடி கொடுத்தீர்கள்? என்ற கேள்விக்கணைகள் எழும் என்பதால் இப்படி துரைமுருகனை பேச வைத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதேபோல திருச்சிதான் சரியான இடம். தமிழகத்தின் தலைநகராக திருச்சி ஒரு நாள் மாறும். அதற்காக யாராவது ஒரு ஆள் வருவான். நடக்காமல் இருக்காது; நிச்சயமாக அது நடக்கும் என்று சொல்வது அமைச்சர் உதயநிதியை மனதில் வைத்து அவர் கூறுவது போலவே உள்ளது.

இப்படி புதிய தலைநகரை உருவாக்கிட குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது தேவைப்படலாம். அதுவரை இதைச் சொல்லியே 2026 தமிழக தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவும் முடிகிறது.

அதேநேரம் அமலாக்கத்துறை தன் கையில் எடுத்துள்ள மணல் கொள்ளை விவகாரம் விஸ்வரூபமாகி இருக்கும் நிலையில் அவர் இப்படி பேசி இருப்பது 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக அரசு சந்தித்து வரும் ஏராளமான பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கூட இருக்கலாம். என்பதையும் மறுக்க முடியாது.

ஆனால் திருச்சியை தலைநகராக்கும் திமுக தலைமையின் ஆசையை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியுடன்தான் பார்க்கிறார்கள். ஏனென்றால் திருச்சி தலைநகராக்கப்பட்டு விட்டால் தங்களால் சென்னையில் அதிகாரம் செலுத்துவதுபோல புதிய தலைநகரில் எதுவும் செய்ய முடியாது என்ற அச்ச உணர்வு அவர்களிடம் காணப்படுவதுதான் அதற்கு முக்கிய காரணம்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கி வரும் இந்த நேரத்தில் துரைமுருகன் எதற்காக இதை பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம்!

Views: - 252

0

0