வரவேற்பு யானைகளால் எழுந்த சிக்கல்… ஆர்டிஐ பதிலால் ஆட்டம் காணும் அமைச்சர்..? தமிழக அரசியல் களத்தில் பரபர…!!

Author: Babu Lakshmanan
16 December 2022, 4:41 pm
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
அமைச்சர் மூர்த்தி தனது மகன் தியானேஷுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பிரமாண்டமான முறையில் நடத்திய திருமணம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் இடையேயும் இன்று வரை பரபரப்பாக பேசப்படும் ஒன்று.

பிரமாண்ட திருமணம்

மதுரை பாண்டிகோவில் அருகே 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு மைதானத்தில்
அமைக்கப்பட்ட அழகு மிளிர்ந்த கோட்டை நுழைவு வாயில், அப்பகுதி முழுவதும் கரும்பு, வாழை மரங்களால் அலங்காரம், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுப் பந்தல், விஐபி டைனிங் டேபிள் என ஏகப்பட்ட பிரம்மாண்டத்தை காட்டி இருந்தனர்.

தவிர அசைவ விருந்துக்காக சுமார் 2,000 ஆடுகள், 5,000 கோழிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட உணவு மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டதாகவும் இதற்காக அமைச்சர் மூர்த்தி 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் மொய்ப் பணம் வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

திருமணத்திற்காக அமைக்கப்பட்ட அந்த கோட்டை வாயில் முன்பாக இரண்டு யானைகள் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவை சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது போல துதிக்கைகளை உயர்த்திக் காட்டிய காட்சிகளையும் அங்கே காண முடிந்தது.

இந்த திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இதை திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் திமுகவின் மண்டல மாநாடு எனக் கூறி இருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி எழுச்சி பெறவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுவாக திருமண விழாவிற்கு நான் குறிப்பு எடுத்து செல்வது இல்லை.
அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்புடன் வந்துள்ளேன். மூர்த்தி பெரிதா? கீர்த்தி பெரிதா? எனக் கேட்டால் கீர்த்தி பற்றி தெரியல. மூர்த்திதான் பெரியது” என்று புகழாரம் சூட்டவும் செய்தார்.

மன்னர் பரம்பரையா..?

அதேநேரம் இந்த பிரம்மாண்ட திருமணம் பற்றிய செய்திகளை கேள்விப்பட்ட அதிமுக, பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், எல்லோருக்கும் ஒரு படி மேலே போய் “அமைச்சர் மூர்த்தி என்ன மன்னர் பரம்பரையில் வந்தவரா, அவருக்கு எங்கிருந்தது வந்தது இவ்வளவு பணம்? இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடமாட்டோம்”என ஆவேசமாக சாடியும் இருந்தார்.

Cv Shanmugam - Updatenews360

என்றுபோதிலும் திருமணம் நடந்து 3 மாதங்களுக்கும் மேலாகி விட்டதால் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வு பற்றிய பரபரப்பு மெல்ல மெல்ல அடங்கிப் போய்விட்டது.

ஆனால் இந்த திருமணம் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் ஒரு விவாத பொருளாக மாறி இருக்கிறது. அதற்குக் காரணம், திருமணத்திற்கு வந்த விஐபிக்களை வரவேற்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு யானைகள்தான். கேரளாவில் இருந்து சாது மற்றும் நாராயண குட்டி என்ற பெயர் கொண்ட இரண்டு ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டு இருந்தது.

யானைகளால் சர்ச்சை

இந்த இரு யானைகளால்தான், அமைச்சருக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் அடுத்தடுத்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதற்கு கிடைத்த பதில்களும் அதிர்ச்சிகரமானவை.

இதன் மூலம், தனியார் விழாக்களில் யானைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் வீட்டு திருமண விழாவிற்கு மட்டும் யானைகள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பதற்கான விடையை அனுமானிக்க முடிகிறது.

வளர்ப்பு யானைகள் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி உண்டா? என்ற சமூக நல ஆர்வலரின் முதல் கேள்விக்கு, ‘அப்படி எதுவும் அனுமதி இல்லை’ என வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜபூஜை

இதேபோல, “மதுரை மாவட்டத்திற்கு பக்கத்து மாநிலங்களில் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 2022 செப்டம்பர் 15-ம் தேதி வரை வளர்ப்பு யானைகள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டதா?” என்ற இன்னொரு கேள்விக்கு, “கேரள மாநிலத்தில் இருந்து, மதுரைக்கு இரண்டு யானைகள் கஜபூஜைக்கு கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என அதிகாரிகள் பதில் அளித்து
இருக்கின்றனர்.

மேலும், மதுரையில் 2022 செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்காக கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகளை கண்காணிக்க மதுரை வனச் சரகம் சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பெயர் மற்றும் பதவி விவரங்களை தகவலாக அளிக்கவும் என்னும் மூன்றாவது கேள்விக்கு, ‘மதுரை வனக்கோட்ட வன உயிரின சரக, வனச் சரக அலுவலர்’ என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமைச்சர் மீது சந்தேகம்

“தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கான பதில்களால் அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காகவும் கஜபூஜை என்ற பெயரில் கேரளாவில் இருந்து இந்த இரண்டு யானைகளும் கொண்டு வரப்பட்டு இருக்குமோ? என்ற பலத்த சந்தேகம் எழுகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“அமைச்சரின் மகன் திருமண விழாவில் பங்கேற்க, யானைகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்ற மற்றொரு கேள்வியும் இங்கே எழுகிறது. கஜ பூஜை என்ற பெயரில் கேரள வனத் துறைக்கு தெரியாமல் இரண்டு யானைகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து அவற்றை தமிழக முதலமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பயன்படுத்தினார்களா?…

இந்த இரண்டு யானைகளும் மீண்டும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனவா?… அல்லது இன்னும் தமிழகத்துக்கு உள்ளேயேதான் அவை இருக்கின்றனவா? என்பன போன்ற கேள்விகளையும் எழுப்புகின்றன. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன.

minister moorthi - updatenews360

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட இரண்டு யானைகள் தொடர்பான முழு விவரங்களையும் ஒரு பிரபல டிவி செய்தி சேனலும், முன்னணி தமிழ் இணையம் ஒன்றும் அப்படியே வெளியிட்டு இருக்கின்றன. இதனால்தான் கஜ பூஜை நடத்துகிறோம் என்ற பெயரில் அந்த யானைகள் அமைச்சர் மூர்த்தியின் திருமண விழாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது.

எனது இல்லத் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படவில்லை, அதற்கு பல கோடி ரூபாயும் செலவு செய்யவில்லை. எனது மகன் திருமணத்தை மிகைப்படுத்தி பேசுவது உண்மைக்கு மாறானது. வருபவர்கள் காத்திருக்காமல் சாப்பிடவே பெரிய பந்தல் அமைத்தோம்.

கல்யாணத்திற்கான எல்லா செலவுகளும் மினிமம் ஆகவே செய்யப்பட்டது. ஆனால் அதை மிகைப்படுத்தி சொல்கிறார்கள் என்று அப்போது மறுத்த அமைச்சர் மூர்த்திக்கு அந்த திருமண விழாவில் நிறுத்தப்பட்டிருந்த வரவேற்பு யானைகளால் இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 474

    0

    0