ஆளே இல்லாத கட்சிக்கு இத்தனை தொகுதிகளா..? தேமுதிக, பாமகவை விமர்சித்த அமைச்சர் பன்னீர்செல்வம்..!!

Author: Babu Lakshmanan
27 March 2024, 2:45 pm
Quick Share

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு வருகை பதிவு எடுத்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், இனி உங்க முகத்தில் பவுடர் இருக்க கூடாது, வேர்வைதான் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை அறிமுகம் செய்யும் அனைத்து கட்சி கூட்டம் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேட்பாளர் ஆ.மணி மற்றும் விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி அனைத்து தொகுதிகளிலும் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அயராது பாடுபட்டு நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

அதனை தொடர்ந்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது பேச்சை துவங்குவதற்கு முன், அவரிடத்தில் கட்சி நிர்வாகிகளை வரவேற்க பெயர் விவரம் கொடுக்கப்பட்டது. அதனை வாசிக்க தொடங்கிய அவர், ஒவ்வொரு நிர்வாகிகளின் பெயரை சொல்லி அழைத்து, அவர்கள் இக்கூட்டத்திற்கு வந்து உள்ளார்களா…? இக்கூட்டத்தில் தான் இருக்கிறார்களா..? என பள்ளி கூடத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு வருகை பதிவு எடுப்பது போல், ஒன்றிய செயலாளர் எங்கே..?, நகர செயலாளர் எங்கே..?, பேரூராட்சி தலைவர் எங்கே…?, ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர் எங்கே..? என கேட்டு கூட்டத்திற்கு அவர்கள் வராமலே அவர்களே பெயர் கொடுக்கப்பட்டுள்ளதா..? என அட்னஸ் எடுத்து செக் செய்தார் .

அதனை தொடர்ந்து, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் சிலரைப் பார்த்து, அனைவருக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், இந்த தேர்தலின் பணியின் போது, இனி அனைவரின் முகமும் வேர்வை படிந்த முகமாத்தான் இருக்கவேண்டும், முகத்தில் பவுடரே இருக்க கூடாது. அந்த அளவிற்கு அனைவரும் தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பணியை செய்ய வேண்டும் எனவும், இனி உங்கள் முகங்களில் பவுடர் இருந்தால், நீங்கள் தேர்தல் பணியை மேற்கொள்ளவில்லை என நான் எடுத்துக் கொள்வேன் என கலகலப்பாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிதாக வந்த தேமுதிக தலைவி வருகின்ற 2026 தேர்தலில் திமுகவே இல்லாமல் செய்வோம் என பேசுகிறார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 2 மாத ஆன நிலையில் கூட அவர் இது போன்று கூறவில்லை. ஆனால் அக்கட்சியின் தலைவி அதை கூறுகிறார், ஆளில்லாத கட்சிக்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதியாம்? இரண்டு ராஜ்ய சபா சீட்டாமா ? என பேசினார்.

சிஏஏ திட்டம் வர அதிமுக சார்பில் பத்து ஓட்டுகளும், கொள்கை கொள்கை என பேசிக்கொண்டு வரும் பாமக அன்புமணி 1 ஓட்டும் போட்டு அந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி என்பது காலையில் அதிமுகவுல சேர்ந்தாச்சுன்னு சொன்னான், மாலையில் பிஜேபின்னு சேர்ந்தாச்சின்னு சொன்னான், பாமகவுக்கு இரண்டு கதவு உள்ளது. அதில் எந்த பக்கம் அதிகளவு பணம் வருகிறதோ, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இதுக்கு பேரு கூட்டணியா? இல்லை , மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடிவரும் நமது போராட்ட கூட்டணியை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தர்மபுரி மாவட்டம் என்றாலே ஒரு அதிருப்தியான எண்ணம் நிலவி வருகிறது, அதை நாம் இந்த தேர்தலில் மாற்ற வேண்டும், பொதுமக்களிடத்தில் வாக்குகளை சேகரிக்க நமக்கு மட்டுமே உரிமை உள்ளது. நமது பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு கேட்க சொல்லுங்கள். நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் பரிசாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40தை அவருக்கு வெற்றி பிறந்தநாள் பரிசாக கொடுப்போம், என பேசினார்.

Views: - 138

0

0