அடுத்த ஆண்டும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!
18 November 2020, 12:17 pmஈரோடு : 10,11 மற்றும 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், பா. வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி வெள்ளாங்கோயில் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில், ஜீவன ஜல் சக்தி மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் பூமிபூஜையுடன் பணிகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கலந்தாய்வு சென்னையில் நடைபெறுகிறது. முதல்வரின் சிறப்பான இந்த திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எளிமையாகி உள்ளது. காலிபணியிடங்கள் பொறுத்தவரையில் நிதிநிலைக்கு ஏற்ப நிரப்பி வருகிறோம். ஐஐடி பயிற்சி நிறுவனம் சார்பில் திங்கட்கிழமை டெல்லியில் இருந்து வரும் குழுவுடன் ஆலோசனை நடத்தி, பொதுதேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விளாங்கோம்பை மலைவாழ் கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.
இதனிடையே, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “பொதுத்தேர்வுகள் குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அரசு பள்ளி ஆசிரியர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்யும். அரசு நடத்தும் பட்டய கணக்காளர் பயிற்சி வகுப்பு ஜனவரியில் துவங்க உள்ளது. அதில் பங்கேற்க பதினொன்றாம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம், என அமைச்சர் தெரிவித்துள்ளார்.