ஜாமீன் கிடைக்காததற்கு CM ஸ்டாலின் காரணமா…? செந்தில் பாலாஜியால் வெடித்த சர்ச்சை.. ஜவ்வாக இழுக்கும் ஜாமீன்!

Author: Babu Lakshmanan
20 October 2023, 8:14 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மூன்றாவது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறையும் அக்டோபர் 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றமும் அவருடைய உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டதை ஏற்கவில்லை.

இம்முறை எப்படியும் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கிவிடும் என்று திமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்தும் இருந்தனர். அதே நம்பிக்கையுடன் முதலமைச்சர் ஸ்டாலினும் இருந்தார் என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் அது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தருவதாகவே அமைந்து விட்டது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்தபோது உடல் நிலையை காரணம் காட்டியதை கோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், அவரை ஜாமீனில் வெளியே விட்டால் வழக்கு தொடர்புடைய சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று மட்டுமே கறார் காட்டியது.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில் மேலும் இரண்டு முக்கிய அம்சங்களும் சேர்க்கப்பட்டதால் இனி அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டுள்ளது.

ஏனென்றால் இந்த தீர்ப்பில், “செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும்போது, ஜாமீனில் விடுவித்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை இருப்பதாக தெரியவில்லை.

குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கடந்த கால நடவடிக்கைகள், தற்போது வரை அவர் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடித்து வருவது, அவருடைய சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது, கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவற்றை பார்க்கும்போது தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால் அவர் இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலைக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று தெரிகிறது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பது, இந்த வழக்கின் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற அமலாக்கத்துறையின் அச்சத்தில் நியாயமும் இருக்கிறது

எனவே அதிகார பலமிக்க செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கை நியாயமானதுதான். ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது” என்று கூறி ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து இருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த போதெல்லாம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அசோக் குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது, வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்த விவகாரங்களையும் முன் வைத்து வாதிட்டது என்றாலும் கூட உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோர முடியாது. அவர் அமைச்சராக இருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மட்டுமே அந்த நீதிமன்றம் முக்கிய விஷயமாக பதிவு செய்தது. மற்ற இரண்டு வாதங்களையும் பெரியதொரு விஷயமாக எடுத்துக்கொண்டது போல தெரியவில்லை.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, ஆஜரான திமுகவின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து அவருடைய உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம்” என்று வாதிடவும் செய்தார்.

ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் “செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட  தகவலின்படி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி
67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

மேலும்,செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்குத் தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் எனக் குறிப்பிடவில்லை. தவிர செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து நான்கு மாதங்களாக தலைமறைவாக இருக்கும் நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருப்பதாகவும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அமலாக்கத்துறை வைத்த இந்த மூன்று முக்கிய வாதங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பதை காண முடிகிறது.

உயர் நீதிமன்றம் கைவிட்டால் செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான இரண்டு மணி நேரத்திலேயே அவருக்காக பிரபல வக்கீல் முகில் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கலும் செய்தார்.

அமைச்சரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசர வழக்காக விசாரிக்கும் படியும் கேட்டுகொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பதற்கு நீதிமன்றங்கள் கூறும் முக்கிய காரணங்களில் ஒன்று செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான். ஒருவேளை அவர் அமைச்சர் பதவி வகிக்காத நிலையில் ஜாமீன் கிடைத்திருக்குமோ என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை அவருடைய பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரி அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது இந்திய அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல. தார்மீக அடிப்படையிலும் சரியானதல்ல. எனினும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர்தான் முடிவெடுக்கவேண்டும்” என கூறி இருந்தது.

ஆனால் இந்த தீர்ப்பு வெளியாகி 45 நாட்களுக்கு மேலாகியும் இதை முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதுபோல் தெரியவில்லை.
இதுவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கு மிகப்பெரிய ஒரு தடையாக இருக்கலாம் என்று திமுக ஆதரவு ஊடகவியலாளர்களே டிவி செய்தி சேனல்களில் கருத்து தெரிவிக்கும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. அவர்களில் ஒரு சிலர் முதலமைச்சர் ஸ்டாலின் இது பற்றி சிந்திக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

ஒருவேளை ஒவ்வொரு தமிழக அமைச்சரையும் இதேபோல் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர்களின் இலாகாக்களையும் பறிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுமே என்ற தயக்கத்தில்தான் இதை ஒரு கவுரவ பிரச்சனையாக கருதி முதலமைச்சர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் ஒரு காரணம் என்பதை திமுக ஆதரவு ஊடகவியலாளர்களே
மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் ஏன் நான்கு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறார், அவர் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தால் அண்ணனுக்கு எளிதில் ஜாமீன் கிடைத்து விடுமே என்ற யோசனையும் கூறப்படுகிறது.

இன்னும் சிலர், அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்தபோதே அவருடைய மனைவி மேகலா, கணவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் அல்லவா?… அதேபோல அசோக்குமாரின் மனைவியோ, மாமியாரோ ஏன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவில்லை. அதுவும் நான்கு மாதங்களாக தங்களது குடும்பத்தின் தலைவர் எங்கே இருக்கிறார்? என்பதே தெரியாத நிலையில் ஆட்கொணர்வு மனுவை அவர்கள் தாக்கல் செய்திருக்கலாமே? என்ற கேள்வியும் பொது வெளியில் எழுப்பப்படுகிறது.

எனினும் அமலாக்கத்துறையின் புதிய வழக்கில் அசோக்குமாருடன் அவருடைய மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி இருவரும் சேர்க்கப்பட்டிருப்பதால் அவருடன் சேர்ந்து மூவரும் தலைமறைவாகி விட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால் இந்த மூவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி நான்கு மாதங்கள் ஆகிறது. ஆனாலும் அவர்கள் யாருமே இதுவரை நேரில் ஆஜரானதாக தெரியவில்லை.

எனவே செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்திலும் திமுக அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

வழக்குகளில் துப்பு துலக்குவதில் தமிழக போலீசார், லண்டன் நகரின் பிரபல ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையானவர்கள் என்று கூறப்படுவது உண்டு.

அவர்களாவது அசோக்குமாரை தேடிக் கண்டுபிடித்து அமலாக்க துறையிடம் ஒப்படைப்பார்களா?… அதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வழி பிறக்குமா?…என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 163

0

0