மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி… 9 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு ; ஆயத்தமாகும் அமலாக்கத்துறை… !!

Author: Babu Lakshmanan
14 June 2023, 8:54 am
Quick Share

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக துணை ராணுவப் படையினர், அதிவிரைவு படையினர் என அடுத்தடுத்து குவிக்கப்பட்டனர்.

சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும், சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து 9 மணிக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 285

0

0