செந்தில் பாலாஜியுடன் திடீர் மோதல்..! பதவிக்காக நாடகமாடுகிறாரா ஜோதிமணி?

Author: Babu Lakshmanan
9 October 2021, 4:50 pm
jothimani - updatenews360
Quick Share

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்று தேர்தல் நடந்தது.

குறிப்பாக கரூர் மாவட்ட பஞ்சாயத்து வார்டு எண் 8, கரூர் பரமத்தி வேலூர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 8, உள்பட 10 இடங்களுக்கும் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட இரண்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, திமுக-காங்கிரஸ் இடையே ஒரு பெரும் பஞ்சாயத்தே நடந்து கொண்டிருக்கிறது.

இணைந்த கைகள்

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவருடைய அமைச்சரவையில் பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2016 அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 2017-ல் டிடிவி தினகரன் கட்சிக்கு சென்றார்.
பின்பு 2018 இறுதியில் திமுகவுக்கு தாவினார். அவர் ராஜினாமா செய்த அரவக்குறிச்சி தொகுதிக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டபோது அதே தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.

எங்க "கூட்டணி" செம ஸ்டிராங்.. அண்ணன் செந்தில் பாலாஜியுடன்.. டூவீலரில் போன  ஜோதிமணி.. வைரல் போட்டோ! | dmk mp senthil balaji and congress mp jothimani  photo becomes viral - Tamil ...

அப்போது, திமுக கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டார். இதனால் இவர்கள் ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட நேர்ந்ததால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான நட்பு அதிகரித்தது.

ஜோதிமணிக்காக செந்தில் பாலாஜி கரூர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இருவருமே அந்தத்தேர்தலில் வெற்றி பெற்றனர். அப்போது செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக பயணித்தது தேர்தல் பிரச்சார களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த செந்தில் பாலாஜி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட அவருடைய வெற்றிக்காக தினமும் 16 மணி நேரம் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஜோதிமணி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்தத் தேர்தலிலும் இருவரும் ஒன்றாகவே பயணித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியை தனது அரவக்குறிச்சி தொகுதி கடந்து கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அழைத்து சென்று ஜோதிமணி அதிரடி காட்டினார்.

கருத்து மோதல்

இப்படி தேர்தலின்போது எங்கு சென்றாலும் இணைபிரியாமல் காணப்பட்ட இவர்கள் இருவருக்கும் தற்போது பிணக்கு ஏற்பட்டுள்ளது, என்கிறார்கள். அதாவது இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துக் கொள்வதில்லை, செந்தில் பாலாஜி இருக்கும் பக்கமே ஜோதிமணி தலைவைத்து படுப்பது இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு உள்ளது.

இருவரும் எப்படி எலியும், பூனையாக மாறினார்கள் என்ற கேள்விக்கு இதுவரை யாராலும் விடை காண முடியவில்லை. ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலின்போது, திமுகவினரை ஆதரித்து ஜோதிமணி பிரச்சாரம் செய்யவில்லை என்பதுதான்.

மேலும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற நிலையில் ஜோதிமணி அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அது மட்டுமல்ல கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஒருமுறைகூட அவர் ஈடுபடவில்லை என்று திமுகவினர் மனம் குமுறுகின்றனர்.

பதில் இல்லை

இதுபற்றிய செய்தி ஒரு நாளிதழில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனாலும் அதுபற்றி ஜோதிமணி அலட்டிக் கொள்ளவில்லை. எனினும் அது தொடர்பாக அவர் உடனடியாக, டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டார். அதில், “முதல் கட்டமாக 4-ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மணப்பாறை, விராலிமலை தொகுதிக்கும் 5-ம் தேதி கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிக்கும் தேதி கொடுத்திருந்தேன். கரூர் மாவட்டத்தில் இருந்து பதில் இல்லை. ஏன் என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது என் தரப்பில் பிரச்சாரத்தை எப்போதும்போல மேற்கொண்டுதான் வருகிறேன். ஆனால் திமுக தரப்பில் இருந்துதான் எந்த பதிலும் இல்லை. தேதிகளை ஒதுக்கி கொடுத்தும் கூட அவர்கள் எனக்கு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை என்று குட்டு வைப்பதுபோல் அவருடைய பதிவு அமைந்திருந்தது.

அதுவும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தது போலவும் அந்த பதிவு இருந்தது.

இதை அமைச்சராலும், கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளாலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுக்கும், ஜோதிமணி எம்பியின் ஆதரவாளர்களுக்கும் இடையே தற்போது மோதல் வெடித்துள்ளது.

பெருமை பாட வேண்டும்

இதுகுறித்து கரூர் மாவட்ட திமுகவினர் கூறும்போது, “கடந்த இரண்டு மாதங்களாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தொகுதியின் எம்பி என்கிற முறையில் ஜோதிமணி கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். அவருடைய இந்த திடீர் போக்கிற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் 3 முக்கிய இலாகாக்களை வகிப்பதால் அவரை நாங்கள் முப்பெரும் துறை அமைச்சர் என்று அழைக்கிறோம். ஆனால் ஜோதிமணியும் தன்னை இதேபோல பெருமைப்படுத்தி பேசவேண்டும் என்று விரும்புகிறார்.

தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தபோதும் புதுக்கோட்டை போன்ற வெளி மாவட்டங்களில் பிரச்சாரத்துக்கு செல்லும் ஜோதிமணி தனது மாவட்டத்தில் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு பிரச்சாரம் செய்வதற்கு யாருடைய அனுமதியை எதிர்பார்க்கிறார்? இன்னும் சொல்லப் போனால் கடந்த 7-ந்தேதி ஜோதிமணி தனது வீட்டிலேயே இருந்துள்ளார்.

anna arivalayam- updatenews360

ஆனாலும் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற இறுதி கட்ட பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர் எம்பி ஆகி இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் பல இடங்களுக்கு நன்றி தெரிவிக்க போகவில்லை. இதை காங்கிரஸார் தங்கள் தலைமைக்கும் சொல்லிவிட்டார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜியிடமும் நாங்கள் முறையிட்டு இருக்கிறோம். அதனால் ஜோதிமணி மீது அமைச்சர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்” என்றனர்.

முக்கிய தலைவர் என்ற நினைப்பு

ஆனால் ஜோதிமணியின் ஆதரவாளர்களோ, வேறு ஒரு காரணத்தை கூறுகின்றனர்.
“செந்தில்பாலாஜி எம்எல்ஏவாக இருந்தவரை, ஜோதிமணி எம்பியை பாராட்டியும், புகழ்ந்தும் பேசிவந்தார். ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பின்பு அவர் கண்டு கொள்வதே இல்லை. பொது நிகழ்ச்சிகளில் ஜோதி மணியை பாராட்டி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டதால், தான் கரூருக்கு மட்டுமல்ல இந்த தமிழ்நாட்டுக்கே ஒரு முக்கிய தலைவர் என்ற நினைப்பு அவருக்கு வந்துவிட்டது.

SenthilBalaji-DMK - updatenews360

அமைச்சர் ஆவதற்கு முன் இருந்த செந்தில்பாலாஜி வேறு, அமைச்சரான பின் இருக்கும் செந்தில்பாலாஜி வேறு. இதை ஜோதிமணி தாமதமாக புரிந்து கொண்டதால்தான், சற்று விலகியே இருக்கிறார். தொகுதி எம்பி என்கிற முறையில் திமுகவினர் தனக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பதில்லை என்னும் மனவருத்தமும் அவரிடம் உள்ளது” என்கின்றனர்.

காங்., தலைவர் பதவிக்கு செக்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டுவந்த செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் நாடகம் ஆடுகிறார்கள் என்றே கருதத் தோன்றுகிறது. தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பான பேச்சு கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. தலைவர் பதவியை ராகுல் எப்படியும் தனக்கு கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜோதிமணி இருக்கிறார். ஆனால் தமிழக காங்கிரசாரோ, ஜோதிமணி காங்கிரஸ் எம்பியாக செயல்படாமல் திமுக எம்பி போலவே செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு தலைவர் பதவியைக் கொடுத்தால் பீட்டர் அல்போன்ஸ் போல ஒரேடியாக திமுக பக்கம் சாய்ந்து விடுவார். அது தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பதற்கு தடையாக மாறிவிடும் என்று ராகுல் காந்திக்கு, புகார் கடிதங்களை தட்டி விட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல், தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்கும் எண்ணத்தை தற்காலிகமாக கைவிட்டு இருக்கிறார். இதைத்தெரிந்து கொண்டதால்தான் ஜோதிமணி திமுகவிடம் இருந்து விலகி நிற்பதுபோல போக்கு காட்டி வருகிறார்.

அதேபோல் கரூர் மாவட்ட திமுகவினரும், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜோதிமணியிடம் காட்டி வரும் நெருக்கம் குறித்தும், அவர் அளிக்கும் சிபாரிசு கடிதங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் சீனியர் தலைவர்கள் ” முதலமைச்சர் உங்களை நம்பி 3 முக்கிய இலாகாக்களை கொடுத்திருக்கிறார். அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் கெட்ட பெயரை வாங்கிக் கொள்ளும் நிலை உருவாகிவிடும்” என்று செந்தில் பாலாஜிக்கு அட்வைஸ் செய்ததாக சொல்கிறார்கள்.

இதனால்தான் இவர்கள் இருவரும் தாங்களாகவே எதிரெதிர் துருவங்களாக மாறி விட்டனர். மற்றபடி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதெல்லாம் நகைச்சுவையான விஷயங்கள்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 391

0

0