‘எம்.பி.ஜோதிமணியின் தர்ணா அரசியல் விளம்பரத்திற்காக தான்’: பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Author: Aarthi Sivakumar
4 December 2021, 3:44 pm
Quick Share

கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்ட எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்புப் போராட்டம் விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது அமைச்சராக உள்ளசெந்தில்பாலாஜி, 2018 டிசம்பரில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், இந்தத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார்.

அதேசமயம், அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜோதிமணியும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது, தனது சகோதரி ஜோதிமணிக்கு ஓட்டு போட வேண்டும் என்று செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார். அதேபோல, ஜோதிமணியும் அண்ணன்செந்தில் பாலாஜிக்கு வாக்களியுங்கள் என்று பாசம் காட்டி பிரச்சாரம் செய்தார்.

இதனையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஜோதிமணி பிரச்சாரம் செய்தார். இதில் வெற்றிபெற்று, செந்தில் பாலாஜி அமைச்சரான பின், இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

பின்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது ஜோதிமணியை திமுகதரப்பிலிருந்து பிரச்சாரத்துக்கு அழைத்தபோது, ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிரச்சாரத்துக்கு வருவதைதவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்துகலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் முகாமை நடத்தக் கோரி ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி முதல் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டம் அடுத்த நாளும் தொடர்ந்தது. அன்றைய தினம் கரூரில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் ஜோதிமணியை சந்தித்து சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன்பின், ஜோதிமணியுடன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, உள்ளிருப்புப் போராட்டத்தை ஜோதிமணி கைவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், மணதட்டை ஊராட்சி மன்ற தலைவர் தனது ஊராட்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் சாவியை தூக்கி எறிந்துவிட்டு கோவமாக சென்றாரே, என செய்தியாளர்கள கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ஊராட்சி மன்ற தலைவர் தனது கோரிக்கைகளை மனுவாக யாரிடம் கொடுத்தார்? அவர் கோரிக்கையை பட்டியலிட்டது என்ன ? ஊராட்சிக்கு என்ன தேவை என்பதை அவர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய மனுவாக எழுதி கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

மேலும், தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் மீதும் மாவட்ட ஆட்சியர் மீதும் அவதூறு பரப்புகின்றனர். செய்தித்தாள்கள் ஊடகங்களில் தங்கள் பெயர் வர வேண்டும் என்பதற்காக இதனை செய்கின்றனர். தமிழக மக்களுக்காக தமிழக அரசு தமிழக முதலமைச்சர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் உடனுக்குடன் எடுத்து சென்று, அவர் அனுமதி பெற்ற பிறகு, உரிய நிதி பெற்ற பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இவரது இந்த பதில், சமீத்தில் ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து , உள்ளிருப்பு போராட்டம் நடத்திய எம்.பி.ஜோதிமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்கின்றனர்.

Views: - 235

0

0