உதயநிதிக்கு போட்டியாக களமிறங்கும் துரை தயாநிதி : குடும்பத்தில் வெடிக்கும் குடுமிப்பிடி சண்டை!!

17 November 2020, 6:53 pm
udhayanidhi - durai dayanidhi - updatenews360
Quick Share

சென்னை: திமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் இறங்கும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க, அழகிரி தனது மகன் துரை தயாநிதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்குப் போட்டியாக களம் இறக்க முடிவு செய்துள்ளதால், ஸ்டாலின் அதிர்ந்து போயிருப்பதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குடுமிப்பிடி சண்டையால், 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் கட்சிக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து திமுக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

udhayanidhi - updatenews360

அதேநேரம், ஸ்டாலினின் குடும்ப அரசியலாலும், உதயநிதியின் அடாவடியான நடவடிக்கைகளாலும், பாதிக்கப்பட்ட திமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். வேறு வழியில்லாமல் உதயநிதியால் ஓரங்கட்டப்பட்டு உள்ளக் குமுறலுடன் கட்சியில் அழகிரியின் புதிய அணிக்கு மாறி, உதயநிதியின் கொட்டத்தை அடக்கத் தயாராக இருக்கிறார்கள்.

திமுகவின் பொருளாளராக கருணாநிதி நியமிக்கப்பட்ட பின் அண்ணாவிடம் பேசி தனது மருமகன் மாறனை எம்.பி. ஆக்கினார். 1982 ஆம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞர் அணியின் தலைவராக்கினார். படிப்படியாக அவருக்குப் பதவிகள் கொடுத்து பொருளாளர் பதவி வரை உயர்த்தினார். பின்னர், ஸ்டாலின் கட்சியின் தலைவராக இருக்கிறார். தனது இன்னொரு மகன் மு.க. அழகிரியை 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தி மத்திய அமைச்சராக்கினார். தென் மண்டல திமுகவின் அமைப்பாளர் பதவியையும் அழகிரிக்குக் கொடுத்தார். தனது, மகள் கனிமொழியையும் மாநிலங்களவை உறுப்பினராக்கினார். தனது பேரன் தயாநிதி மாறனையும் மத்திய அமைச்சராக்கினார்.

கருணாநிதிக்குப் பிறகு வாரிசு அரசியலின் மூலம் திமுக தலைவரான ஸ்டாலினின் தனது மகன் உதயநிதியை கட்சியின் இளைஞர் அணித்தலைவராக நியமித்துள்ளார். வாரிசுக்கு வாரிசு என்ற அடிப்படையில் கட்சியில் பதவிபெற்ற உதயநிதி, தனது சொந்த உழைப்பினாலும், தலைமை மீது கொண்ட விசுவாசத்தாலும் உயர்ந்த பதவிகளை அடைந்த அதிமுகவின் மூத்த அமைச்சர்களை கண்ணியமில்லாமல் விமர்சித்து வருகிறார். திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்கும்போது, கட்சித்தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்தைச் சொல்லி திமுகவில் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியை முன்னிறுத்துவதாக மூத்த தொண்டர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாற்பது ஆண்டுகளாகக் கட்சிக்கு உழைத்த நிர்வாகிகள் உதயநிதியைக் கையெடுத்துக் கும்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர் அணித் தலைவரானவுடன் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் தன்னிடம் பேசும்படி அவரின் ஆதரவாளர்கள் வற்புறுத்தினார்கள். கட்சி விளம்பரத்திலும், கட்சி போஸ்டர்களிலும் உதயநிதி படம் இடம்பெறாவிட்டால் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் நிலை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி பெற்ற வெற்றிக்கே அவர்தான் காரணம் என்று அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் பேசினார்கள். அனைத்து எல்லைகளையும் கடந்து ‘மூன்றாம் கலைஞர்’ என்றே உதயநிதி விளம்பரப்படுத்தப்படுகிறார். கட்சியில் தலைவர் ஸ்டாலின் இருக்கும்போது தனது விருப்பப்படி தனது எடுபிடிகளுக்கே பதவிகளையும் தேர்தலில் போட்டியிட இடங்களையும் வாரிக்கொடுத்தார் உதயநிதி. அவரின் சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்கு கட்சியில் இருக்கும் மூத்த தொண்டர்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் சூழலில், அழகிரி தனது அரசியல் ஆட்டத்தைத் தொடங்குவது குறித்து அவரது ஆலோசனை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி இருந்தபோதே திமுகவைக் கைப்பற்ற ஸ்டாலினுடன் அழகிரி கடுமையாக மோதினார். ஆனால், இந்தப் போட்டியில் ஸ்டாலினையே கருணாநிதி ஆதரித்தார். அதனால், ஸ்டாலின் கட்சியைக் கைப்பற்றினார். அழகிரி முழுதும் ஒதுக்கப்பட்டார்.
தான் ஒதுக்கப்பட்டாலும் தனது மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் முக்கிய பதவி தரவேண்டும் என்று குடும்பத்தாருடன் அழகிரி பேசிவந்தார். ஆனால், துரை தயாநிதிக்குப் பதவிகொடுத்தால் உதயநிதிக்கு போட்டியாக அவர் இருப்பார் என்று ஸ்டாலினின் குடும்பத்தினர் அந்த சமரசத்தை ஏற்கவில்லை. போட்டியே இல்லாத களத்தில்தான் உதயநிதியால் சிறப்பாக ஆடமுடியும் என்று ஸ்டாலினும் நினைக்கிறார்.

பொறுத்துப்பொறுத்துப் பார்த்த அழகிரி சட்டமன்றத் தேர்தலுக்கு முன் களம் இறங்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவைக் கேட்ட ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். அழகிரியின் வருகையால் தென்மாவட்டங்களில் திமுக கடுமையாக பாதிக்கப்படும் என்பதாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதாலும் மூத்த தலைவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

மேலும், உதயநிதிக்குப் போட்டியாக தனது மகன் துரை தயாநிதியை களமிறக்கவும் அழகிரி முடிவு செய்துள்ளார். அழகிரி தொடங்கும் கட்சிக்கு இளைஞர் அணித்தலைவராக துரை தயாநிதி நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இதனால், உதயநிதியின் அடாவடிப் பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். வேறு வழியில்லாமல் ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் இருந்த திமுக நிர்வாகிகள் அழகிரியின் பக்கம் சாய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதியால் பாதிக்கப்பட்டவர்கள், துரை தயாநிதியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தில் நடக்கும் குடுமிப்பிடி சண்டையால் பல குடும்ப ரகசியங்கள் பகிரங்கமாகப் பேசப்படும் என்று கருதப்படுகிறது. இதனால், திமுகவின் மீதி மக்களுக்கு பெரும் எரிச்சலும், வெறுப்பும் ஏற்படுவதால் வரும் தேர்தலில் திமுக தோற்கும் என்று தலைவர்களும் தொண்டர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.