குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்..! திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட ஸ்டாலின்..!

7 March 2021, 9:44 pm
DMK_Stalin_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குத் தேவையான தொலைநோக்குத் திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திருச்சிக்கு அருகில் உள்ள சிறுகனூரில், திமுக சார்பில் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் இன்று பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக, இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் கட்சியின் பிரச்சார காணொளிகள், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து, விடியலுக்கான உறுதிமொழிகள் எனும் தலைப்பில் தொலைநோக்கு திட்டங்களை வெளியிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் தனது உரையில், “தமிழ்நாட்டின் எதிர்காலமாக திமுகவின் திருச்சி மாநாடு அமைந்துள்ளது. அரசு துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி.

பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய 7 துறைகள் முக்கியமானவை. தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும். கடலளவு திமுக செய்துள்ள சாதனைகளை சொல்ல தனி மாநாடுதான் போட வேண்டும்

பள்ளி இடைநிற்றல் வீதம் குறைக்கப்படும். பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும். நகர்ப்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். ரேஷன் கடையில் பொருள் வாங்கும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

திமுக நடத்திய இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான திமுகவினர் அழைத்து வரப்பட்டனர்.

கட்சிக் கொடிகள், கேட் அவுட்கள் வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என திமுக தலைமை சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தாலும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ தொலைவுக்கு வழிநெடுகிலும் கட்சிக் கொடிகள், கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் மாநில நிர்வாகிகள் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

Views: - 30

0

0