திடீரென இந்துக்கள் பற்றி பேசிய ஸ்டாலின் : தோல்வி பயம் என எழும் விமர்சனம்!!

15 January 2021, 7:31 pm
dmk cover - updatenews360
Quick Share

தேர்தல் நேரத்தில் யாருக்கு பயம் வருகிறதோ, இல்லையோ அரசியல்வாதிகளுக்கு வந்து விடுகிறது. இதில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சிபிஐ ரெய்ட் என்பதெல்லாம் இவர்களுக்கு சாதாரணமே.

முதல் கவலை, தேர்தலில் வெற்றி கிடைக்குமா? ஆட்சியை கைப்பற்றுவோமா? என்று முன்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இந்த பீதி தானாகவே வந்து விடுகிறது. அதுவும் வெகுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கட்சிகளுக்கு
இந்த அச்சம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாததால் என்னவோ சமீபகாலமாக திமுகவுக்கும், இதுபோன்றதொரு அச்சம் வந்திருப்பதை கண்கூடாக அறிய முடிகிறது. இதில் பயம் மட்டுமின்றி கூடவே ஒருவித பதை பதைப்பும் சேர்ந்தே காணப்படுகிறது.

கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் சேனல் இந்து மத பெண் தெய்வங்களை அவமதித்தபோது இந்த கலக்கம் முதலில் லேசாக எட்டிப் பார்த்தது. இந்த கருப்பர் கூட்டத்திற்கு திமுக தரப்பில் இருந்து எந்தவித கண்டன குரலும் எழவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள், ஆன்மீக பெரியோர்கள் பலமாக எதிர்ப்பு தெரிவித்தபோது கூட, திமுக அசைந்து கொடுக்காமல் கமுக்கமாகவே இருந்தது.

ஆனால் இந்த விஷயத்தில், திமுகவை சம்பந்தப்படுத்தி சமூக ஊடகங்களில் பரபரப்பு செய்தி பரவியபோதுதான் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து எங்கள் கட்சிக்கும் கருப்பர் கூட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்தார்.

Thirumavalavan - stalin - updatenews360

இதேபோல் திமுக கூட்டணி கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் இந்து பெண்கள் அனைவரும் விலைமாதர்கள் என்று மனு ஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பதாக சொல்லி தேவையில்லாத ஒரு சர்ச்சையை உருவாக்கினார். அதற்கும் கூட ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் திருமாவளவனுக்கு ஆதரவாகவே பேசினார். இப்படிப்பட்ட அவதூறுப் பேச்சுகள் தனது கட்சிக்கும், கூட்டணிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஸ்டாலின் உணர்ந்ததாக தெரியவில்லை.

மாறாக, இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை பயன்படுத்தி திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகளை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

இதற்கிடையே, தேவையின்றி அவரும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். கடந்த ஆண்டு முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்காக பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு சென்றவர், அங்கு திருநீறு பூசுவதற்கு தந்தபோது, அதை கையால் வாங்கி பின்னர் அப்படியே கீழே கொட்டி விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இது சமூக ஊடங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற விஷயங்களில் ஸ்டாலினையும், திருமாவளவனையும் குறி வைத்து இந்து அமைப்புகள் காய் நகர்த்த தொடங்கின.

அப்போதெல்லாம் இதற்கு பட்டும்படாமல் ஸ்டாலின் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் தமிழக பாஜகவின் வேல் யாத்திரைக்கு பிறகு இந்துக்களை திமுக அவமதிக்கிறது என்ற குற்றச்சாட்டு திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் விடாமல் துரத்தி வருகிறது. இந்துக்கள், இந்து மதம் தொடர்பான சர்ச்சை
கருத்துக்களை தெரிவிப்பது, விமர்சிப்பது திமுகவுக்கு பெரும் நெருக்கடியை, தலைவலியை அளிக்கிறது என்பதை ஸ்டாலின் இப்போதுதான் உணர தொடங்கி இருக்கிறார்.

அதற்கு பதில் தருவதுபோல்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் அவர் பேசியது.

ஸ்டாலின் கூறும் போது, “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் தி.மு.க. திட்டமிட்டு, ஏதோ இந்துக்களுக்கு எதிரி என்பது போல பிரசாரம் செய்கின்றன. இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. என்னுடைய மனைவி போகாத கோவிலே கிடையாது. தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் பலர் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அதை நாங்கள் குறை சொல்வதில்லை. அது அவர்களது விருப்பம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார், பேரறிஞர் அண்ணா.
அந்த வழியைத்தான் இன்று நாங்கள் பின்பற்றுகிறோம்.

என்னதான் சதி செய்து தி.மு.க. மீது பழி சுமத்தினாலும், அவையெல்லாம் மக்களிடம் எடுபடாது” என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.

இதுபற்றி இந்து சமய நெறியாளர்கள் கூறுகையில் “பகுத்தறிவு பேசுகிறோம் என்று திமுக, விசிக, திராவிடர் கழகம் போன்றவை சமீபகாலமாக இந்து மதத்தை தாறுமாறாக விமர்சிப்பது அதிகமாகி விட்டது. இப்படித்தான் ஒரு முறை கருணாநிதி, இந்து என்றால் கள்வன் என்று அர்த்தம் கூறி விட்டு, பின்னர் இதயம் கவர்ந்த கள்வன் என்று நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்று விளக்கம் அளித்தார்.

ஏழுமலையான் உண்டியலுக்கு எதற்கு பாதுகாப்பு என்று கனிமொழி கேட்கிறார். தற்போது ஸ்டாலின் பொதுமேடைகளில் இந்து மதம் பற்றி விமர்சிக்காமல், மாற்று மத மேடைகளிலும் அவர்களது சுபநிகழ்ச்சிகளிலும், இந்துமத ஆன்மீக நம்பிக்கைகளை சாடி வருகிறார். இதுதான் பிரச்சினைக்கு மூலகாரணமே. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டங்களில் ஏன் அவர், இந்து மத நம்பிக்கைகளை அவமதித்து பேசுகிறார்.

நெற்றி நிறைய திருநீர் பூசிய ஒரு மூதாட்டி அவர் முன்பாகவே கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் இந்து என்றாலே வயிறு எரிகிறது என்று பேசுகிறார். சிறுபான்மையினரின் ஓட்டுகள் முழுமையாக கிடைக்கவேண்டும் என்று கணக்குப்போட்டு இந்து மத நம்பிக்கைகளை ஸ்டாலின் கேலி செய்துபேசுகிறார்.
மற்றவர்கள் இப்படி பேசுவதையும் ரசிக்கிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் இந்துமதத்தை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது.


கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது உதயநிதி டுவிட்டர் பதிவில் தனது மகள் பிள்ளையார் சிலையுடன் இருப்பதைப் போன்ற ஒரு படத்தை பதிவிட்டார். ஆனால், திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளில் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த பதிவை நீக்கி விட்டார். ஆனால் இப்போது அவருடைய தந்தை, என் மனைவி செல்லாத கோவில் கிடையாது என்கிறார்.

தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால் தோல்வி ஜுரம் ஸ்டாலினிடம் வந்திருப்பதையே இது காட்டுகிறது. உண்மையிலேயே அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் சொல்லில் ஸ்டாலின் உறுதியாக இருப்பாரேயானால், எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையையும் ஏற்றுக் கொள்வதுதான் சிறந்தது.

ஆனால் இந்து மதத்தை தவிர எங்களுக்கு வேறு எந்த மதமும் சம்மதமே என்று அவர் நினைத்தால் அது சரியல்ல. ஏனென்றால் இந்துக்களிடம் ஆன்மீக நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்பதை அவர் உணர வேண்டும். அதற்கு மதிப்பளித்து அவர் நடந்து கொண்டாலேபோதும். இதைத் தவிர வேறு எதையும் திமுகவிடம் இருந்து இந்துக்கள் எதிர்பார்க்கவில்லை” என்றனர்.

திமுகவும், ஸ்டாலினும் புரிந்து கொண்டால் சரி.