EIA மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கவன ஈர்ப்பு தீர்மானம் : மு.க. ஸ்டாலின் தகவல்..!

14 September 2020, 11:42 am
stalin neet mask - updatenews360
Quick Share

சென்னை : சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை மற்றும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்க உள்ளதாக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் உள்பட 23 பிரதிநிதிகளுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

பின்னர், கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது :-
மறைந்த முன்னாள் ஜனாதிபதி, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முன்னர் சபாநாயகரிடம் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தது கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற கூட்டத் தொடர் இன்னும் இரண்டு நாட்கள் தான் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்‌. ஆனால், இதற்கான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்று இரண்டு நாட்கள் போதாது என்று வலியுறுத்தினார். ஆனால் இதனை சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். 15 மற்றும் 20 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுத்துள்ளோம்.

மேலும் நீட் தேர்வு பிரச்சினை, மாணவர்கள் தற்கொலை, புதிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் குறித்தும் புதிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்க உள்ளோம். நீட் தேர்வில் அரசு நாடகம் நடத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையிலும், சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க வில்லை, எனக் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ‘BAN NEET’ என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து கூட்டத் தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0