அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்கப்படாது என்பது அரசின் முடிவு : திமுக எம்பி கனிமொழி தகவல்
Author: Babu Lakshmanan16 August 2021, 8:29 pm
திமுக அறிவித்த ரூ.1000 ஊக்கத்தொகை அனைத்து குடும்பங்களுக்கு வழங்கப்படாது என்பது அரசின் முடிவு என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலின் போது பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை திமுக அறிவித்திருந்தது. தற்போது, ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்து விட்ட நிலையிலும், அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற வில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், நிதிநிலை மற்றும் முறைகேடுகளினால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுத்து வருகிறார்.
குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1,000 ஊக்கத் தொகை பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த ஊக்கத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குடும்பத்தலைவிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், இல்லத்தரசிகளுக்கான ரூ.1000 ஊக்கத்தொகை அனைத்து குடும்பங்களுக்கு வழங்கப்படாது என்பது அரசின் முடிவு என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :- அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது; ஆகவே தகுதியுடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள்,கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல்; இளம் இயக்குனர்கள் நல்ல கருத்துக்களை திரைப்படங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது; யாரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை, என தெரிவித்துள்ளார்.
0
0