முல்லைப் பெரியாறு.. பதுங்கும் தமிழக காங்.,கம்யூ., மதிமுக : அம்பலமாகும் அரசியல் நாடகம்!
Author: Udayachandran RadhaKrishnan1 November 2021, 4:49 pm
கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதியில் 155 அடி உயரம் கொண்ட 126 ஆண்டுபழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை அமைத்துள்ளது. அணை கேரளாவுக்குள் இருந்தாலும்
அதை இயக்கும் நிர்வாக அதிகாரம் முழுவதும் தமிழக அரசின் வசம்தான் இருக்கிறது.
134 அடியில் திறக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை
இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் தமிழ்நாட்டில் உள்ள வைகை அணையின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாய சாகுபடி, குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கிறது. ஆனால் மிக அண்மையில், அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டியவுடன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு நீரைத் திறந்து விட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க விடாமல் கேரள அரசு சதி செய்து விட்டது என்று தமிழக விவசாயிகள் குமுறுகின்றனர்.
தமிழக அரசிடம் அனுமதி கேட்காத கேரள அரசு?
தமிழக அரசு அதிகாரிகளின் அனுமதியை பெறாமலேயே இந்த நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது, அதன் அருகிலேயே இன்னொரு அணையை கட்ட அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நீண்ட காலமாக முறையிட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் கேரள அரசு, இடுக்கி அணைக்கு தண்ணீரைத் திறந்து விட்டிருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
ஓபிஎஸ் கண்டனம்
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில் “தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதா அல்லது கேரள அரசு தன்னிச்சையாகவே திறந்துவிட்டதா? அப்படியென்றால் தமிழக அரசு அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொண்டார்கள்; தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு 5 மாவட்ட விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? என்ற வினாக்களும் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசிற்கு இருக்கிறது” என்று கண்டித்து இருந்தார்.
வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சும் திமுக – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,”உச்சநீதி மன்றமே நவம்பர் 11 வரை அணையின் நீர்மட்டத்தை 139.5 அடி வரையில் சேமிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், அதை எட்டும் முன்பாகவே அணையிலிருந்து நீர்திறப்பதை தமிழக அரசு எவ்வாறு அனுமதித்தது?
மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே எல்லாம் நடைபெறுகிறது என அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்தி திமுக அரசு சப்பைக்கட்டு கட்டுவது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயலாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது. இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல” என்று குறிப்பிட்டார்.
இப்படி முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரத்தில் கேரள அரசு, தன்னிச்சையாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், தேனி மாவட்ட கலெக்டருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பது, தேனி மாவட்ட கலெக்டரின் முன்பாக நடைபெற வேண்டும் என்பது தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்த விதிமுறை ஆகும்.
தேனியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளைப் பார்த்து, “வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு 139.5 அடி வந்தால் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் 134 அடி நிரம்பியதும் ஏன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டீர்கள்?…” எனக் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அவர்களை கலெக்டர் சமாதானப்படுத்த முயன்றார். அதை ஏற்காத விவசாயிகள், தேவையே இல்லாத நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறக்க கேரள அரசுக்கு தமிழக அரசு துணை போயிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”முல்லைப் பெரியாறு அணையை
தமிழக அரசு, கேரளாவிடம் 90 சதவீதம் தாரைவார்த்து கொடுத்துவிட்டது. தமிழகத்தில் இருந்து யாரையும் அழைக்காமல் கேரளாவின் 2 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடுக்கி கலெக்டர் என மொத்தம் 150 பேர் அணை திறப்புக்குச் சென்றுள்ளனர்.
கேரள அரசின் இந்த நடவடிக்கையால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமாநாதபுரம் மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இதைத் தமிழக அரசு கண்டும், காணாதது போல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு செயல்திறன் அற்றதாக உள்ளது.
தேனி மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் ஒருவர் கூட இவ்விவகாரம் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை என்பது வேதனையாக உள்ளது. நாங்கள் மட்டுமே போராடி வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற விரைவில் தொடர் போராட்டத்தையும் நடத்துவோம்” என்று கொந்தளித்தனர்.
வாயை திறக்காத வைகோ
இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த அதிமுக அரசு காலத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து கடுமையாக குற்றம்சாட்டி பேசி வந்தார்.
தற்போது இவ்வளவு களேபரங்கள் நடந்தும், விசிக தலைவர் திருமாவளவன் பாணியில் வைகோ அடக்கியே வாசிக்கிறார்.
“கேரள அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழக மக்கள் தயாராக உள்ளனர்”என்று மயிலிறகால் வருடிக் கொடுப்பதுபோல் அவர் கூறி இருக்கிறார். எந்த இடத்திலும் வைகோ கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்துவிட்டதை கண்டிக்கவில்லை. அப்படியே பூசி மெழுகுகிறார்.
கூட்டணி கட்சிகள் கப்-சிப்
தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மூன்றும் முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரமா?… அப்படியென்றால் என்ன என்பதுபோல மயான அமைதி காத்து வருகின்றன.
இது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஜோதிமணி எம்பி போன்றோர் சில நாட்களுக்கு முன்பு, தமிழக அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் ரவி நேரடியாக தலையிடுகிறார். இது கண்டிக்கத்தக்கது என்று
‘கடு கடு’ அறிக்கை ஒன்றை விடுத்திருந்தனர். ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அத்துமீறி தமிழகத்தின் உரிமையை எடுத்துக் கொண்டுள்ளது பற்றி அவர்கள் வாயே திறக்கவில்லை.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், என்னதான் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் முட்டல், மோதல் நடந்தாலும் அதை தமிழக காங்கிரஸ் கண்டுகொள்ளவே செய்யாது.
அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ள ஒரு சில மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அதனால் அந்த மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுத்து கேரள மக்களின் கோபத்தை சம்பாதிக்க ஒருபோதும் காங்கிரஸ் விரும்பாது. அது அங்கு தேர்தலில் ஓட்டுக்கு வேட்டு வைத்து விடும் என்பதும் தமிழக காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பயந்து காங்கிரஸ் பதுங்கிக்கொண்டு விட்டது.
வைகோ இப்போது, கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக பேசுவது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதம். எதிர்த்துக் கருத்துச் சொன்னால் அது திமுகவுக்கு கோபத்தை வரவழைத்து விடுமோ என்று அவர் பயந்து இப்படி கூறி இருக்கலாம். அதேபோல் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கைகளோ பூஜ்யமாக உள்ளது.
“விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளுக்காக குரல் கொடுப்போம், போராடுவோம் எங்களைப்
போல விவசாயிகளுக்காக யாரும் உயிரைக் கொடுக்க முன்வர மாட்டார்கள்” என்று வீர வசனம் பேசும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அடாவடி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. கப்சிப் ஆகி விட்டன.
திமுக கூட்டணியின் இரட்டை வேடம்
ஏனென்றால் அங்கே நடப்பது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு. கேரள அரசை கண்டித்தால் அது அநீதியாகி விடும் என்று நினைத்து அப்படியே மௌனமாகி விட்டார்கள். முல்லைப் பெரியாறு விவகாரம், திமுக கூட்டணிக் கட்சிகளின் இரட்டை வேட நாடகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. ஊருக்கு ஒரு வேடம், ஓட்டுக்கு ஒரு அரசியல். இதுதான் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் கொள்கை. 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கூறுவதைப் பார்த்தால் இதில் திமுக அரசும், கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல்தான் நடந்து கொண்டிருப்பது, தெரிகிறது” என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர்.
1
0