கேரளாவிடம் புதிய அணை கட்டுவது பற்றி பேசக்கூடாது… முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்க : ஓபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
13 November 2021, 11:45 am
Ops - mullai dam - stalin - updatenews360
Quick Share

சென்னை : முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்‌ கொள்ளவும்‌, பேபி அணை மற்றும்‌ சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின்‌ அணையின்‌ நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக்‌ கொள்ளவும்‌, பழுது பார்க்கும்‌ பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும்‌ அளிக்கக்கூடாது எனவும்‌ உச்ச நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினில்‌ கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பின்‌ அடிப்படையில்‌, பேபி அணையை பலப்படுத்தும்‌ வகையில்‌, அதற்குக்‌ கீழுள்ள 23 மரங்களை வெட்டுவது தொடர்பாக கம்பம்‌ நீர்‌ ஆதாரத்‌ துறையின்‌ செயற்‌ பொறியாளர்‌ அவர்களால்‌ கேரள வனத்‌ துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப்‌ பரிசீலித்த பெரியாறு புலிகள்‌ காப்பக கிழக்குக்‌ கோட்ட துணை இயக்குநர்‌ அவர்கள்‌, தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட முல்லைப்‌ பெரியாறு பகுதியில்‌ உள்ள 15 மரங்களை வெட்ட பரிந்துரை செய்து கேரள அரசின்‌ முதன்மை தலைமை வனப்‌ பாதுகாவலர்‌ மற்றும்‌ தலைமை வனவிலங்கு காப்பாளர்‌ அவர்களுக்கு 30-10-2021 நாளிட்ட கடிதத்தின்‌ மூலம்‌ அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்‌.

இதன்‌ அடிப்படையில்‌, கேரள அரசின்‌ முதன்மை தலைமை வனப்‌ பாதுகாவலர்‌ மற்றும்‌ தலைமை வனவிலங்கு காப்பாளர்‌ அவர்கள்‌ அங்குள்ள 15 மரங்களை வெட்டிக்‌ கொள்ள அனுமதி அளித்து அதற்கான 05-11-2021 நாளிட்ட ஆணையை கம்பத்தில்‌ உள்ள நீர்‌ ஆதாரத்‌ துறை செயற்‌ பொறியாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்‌. அந்த ஆணையுடன்‌ இணைக்கப்பட்டுள்ள பட்டியலில்‌ எந்தெந்த மரங்கள்‌ வெட்டப்பட வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களும்‌ கேரள அரசிற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்கள்‌. இந்தச்‌ செய்தி அனைத்து பத்திரிகைகளிலும்‌, ஊடகங்களிலும்‌ செய்தியாக வந்தது. இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌, மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்குத்‌ தெரியாது என்றும்‌, இது குறித்த முடிவு அதிகாரிகள்‌ மட்டத்தில்‌ எடுக்க முடியாது என்றும்‌, இது கொள்கை சம்பந்தப்பட்ட முடிவு என்றும்‌, இது குறித்து கேரள முதலமைச்சருக்கோ, நீர்‌ பாசனத்‌ துறை அமைச்சருக்கோ, வனத்‌ துறை அமைச்சருக்கோ எதுவும்‌ தெரியாது என்றும்‌ குறிப்பிட்டிருந்தார்‌. அந்தச்‌ செய்தியும்‌ பத்திரிகைகளில்‌ வெளி வந்துள்ளன.

இதனைத்‌ தொடர்ந்து மரங்களை வெட்டுவதற்கான ஆணை ரத்‌து செய்யப்பட்டு விட்டதாகவும்‌ பத்திரிகையில்‌ செய்தி வெளி வந்துள்ளது. மாண்புமிகு கேரள முதலமைச்சருக்கு தெரியாமல்‌ அதிகாரிகள்‌ மட்டத்தில்‌ இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கும்‌ என்பது நம்பும்படியாக இல்லை. மேலும்‌, புதிய அணை கட்டப்பட வேண்டும்‌ என்பதில்‌ கேரளா உறுதியாக உள்ளதாகவும்‌, இது குறித்து அடுத்த மாதம்‌ நடைபெறவிருக்கும்‌ முதலமைச்சர்களுக்கு இடையேயான கூட்டத்தில்‌ பேச இருப்பதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வருகின்றன.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்காக இந்திய வனப்‌ பணி அதிகாரியான முதன்மை தலைமை வனப்‌ பாதுகாவலர்‌ மற்றும்‌ தலைமை வனவிலங்கு காப்பாளர்‌ அவர்களை தற்காலிக பணியிடை நீக்கம்‌ செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பினை நடைமுறைப்படுத்திய அதிகாரியை பணியிடை நீக்கம்‌ செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்பதோடு மட்டுமல்லாமல்‌ நீதிமன்ற அவமதிப்பாகும்‌.

மரங்களை வெட்ட அனுமதி அளித்த ஆணை வெளிவந்த மறு வினாடியே மாண்புமிகு கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, அதற்குப்‌ பிறகு நடந்த நிகழ்வுகள்‌ குறித்து மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது. மாண்புமிகு நீர்வளத்‌ துறை அமைச்சரோ, ‘இது அம்மாநில அரசு அலுவலர்களும்‌ அமைச்சரும்‌ சம்பந்தப்பட்ட விஷயம்‌, அதில்‌ நாங்கள்‌ தலையிட விரும்பவில்லை’ என்று மழுப்பலான பதிலைக்‌ கூறி நழுவி விட்டார்‌. தி.மு.க. கூட்டணிக்‌ கட்சிகளும்‌ இதுகுறித்து பேச தயங்குகின்றன. தமிழ்நாட்டின்‌ உயிர்நாடி பிரச்சனையான முல்லைப்‌ பெரியாறு பிரச்சனையில்‌ மவுனமாக இருப்பது தமிழக மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு செய்கின்ற துரோகம்‌ ஆகாதா? என்னதான்‌ கூட்டணித்‌ தர்மம்‌ என்றாலும்‌, தமிழ்நாட்டின்‌ உரிமை பறிபோகின்ற விஷயத்தில்‌ மவுனம்‌ சாதிப்பது சரிதானா! என்பதை தி.மு.க. மற்றும்‌ அதன்‌ கூட்டணிக்‌ கட்சிகள்‌ ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்‌.

கேரளாவிற்கு ஆதரவான மனநிலையில்‌ ஆளும்‌ கூட்டணியை சேர்ந்த அரசியல்‌ கட்சிகள்‌ இருப்பதாக பொதுமக்களும்‌, விவசாயப்‌ பெருங்குடி மக்களும்‌ நினைக்கும்‌ சூழ்நிலை தமிழ்நாட்டில்‌ உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில்‌ இருக்கின்ற கட்சிகளுக்குள்‌ கருத்து வேறுபாடுகள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ தமிழ்நாட்டின்‌ உரிமை என்று வரும்போது, அதை எதிர்த்து குரல்‌ கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களின்‌ வாக்குகளைப்‌ பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, இருக்கின்ற அனைவருக்கும்‌ உண்டு. இந்த விஷயத்தில்‌ மவுனம்‌ சாதிப்பது என்பது தமிழ்நாட்டின்‌ உரிமையை கேரளாவிற்கு அடகு வைத்ததற்குச்‌ சமம்‌. முல்லைப்‌ பெரியாறு பிரச்சனையில்‌ நாம்‌ அனைவரும்‌. ஒன்று சேர்ந்து குரல்‌ கொடுக்க வேண்டும்‌ என்பதோடு, இது குறித்து, அனைத்துக்‌ கட்சிகளின்‌ கூட்டத்தைக்‌ கூட்டி, விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும்‌.

முல்லைப்‌ பெரியாறு அணை குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில்‌ வருவதாக கூறப்படுகிறது. அப்போது, இது குறித்து வலுவான வாதங்களை தமிழ்நாட்டின்‌ சார்பில்‌ எடுத்துரைக்க வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம்‌ உள்ளது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இந்தப்‌ பிரச்சனையில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம்‌ தீர்ப்பளித்துள்ள்‌ நிலையில்‌, ஆண்டுக்‌ கணக்கில்‌ இடையூறு அளித்து வரும்‌ கேரள அரசை தட்டிக்‌ கேட்க வேண்டுமென்றும்‌, மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப்‌ பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டுமென்றும்‌, இந்தப்‌ பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துக்‌ கட்சிகளின்‌ கூட்டத்தை கூட்ட வேண்டும்‌ என்றும்‌, தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின்‌ நடவடிக்கையை
உச்ச நீதிமன்றத்தில்‌ எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டுமென்றும்‌, புதிய அணை கட்டுவது தொடர்பான எந்தப்‌ ” பேச்சுவார்த்தைக்கும்‌ இடம்‌ தரக்கூடாது என்றும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 295

0

0