முல்லைப்பெரியாறு அணையை அடகு வைத்த திமுக… வாய்ப் பொத்தி வேடிக்கை பார்க்கும் அரசைக் கண்டித்து 9ம் தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக அறிவிப்பு

Author: Babu Lakshmanan
2 November 2021, 12:56 pm
eps - ops - stalin - updatenews360
Quick Share

சென்னை : முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ 142 அடி தண்ணீர்‌ தேக்கப்படாமல்‌, கேரளத்தின்‌ நிர்பந்தம்‌ காரணமாக நீர்‌ இருப்பை குறைந்திருக்கும்‌ திமுக அரசையும், நீர்பாசனத்‌ துறை அமைச்சர் துரைமுருகனைக் கண்டித்தும் 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எப்பொழுதெல்லாம்‌ தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம்‌ தமிழ்‌ நாட்டின்‌ அடிப்படை உரிமைகளை, அந்தக்‌ கட்சியினர்‌ அடகு வைப்பதும்‌, தங்கள்‌ சுயநலனுக்காகவும்‌, அரசியல்‌ அழுத்தங்களினாலும்‌ தமிழ்‌ நாட்டின்‌ ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும்‌ தொடர்ந்து நடைபெறுகிறது. தென்‌ தமிழ்‌ நாட்டில்‌ தேனி, மதுரை, திண்டுக்கல்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ ஆகிய மாவட்ட மக்களின்‌ வேளாண்மை மற்றும்‌ குடிநீர்‌ தேவைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றில்‌ ஒடிவரும்‌ முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்‌ ஆகும்‌.

Mullai Periyar dam- Updatenews360

தேனி, மதுரை, திண்டுக்கல்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ ஆகிய பகுதிகள்‌ உள்ளடங்கிய நிலப்‌ பரப்பில்‌, மக்கள்‌ பாசனத்திற்கும்‌, குடிதண்ணீர்‌ தேவைகளுக்கும்‌ தண்ணீரின்றி அல்லற்பட்டு வறுமையில்‌ வாடி, அவற்றின்‌ விளைவாக சமூகம்‌ நலிவடைந்து இருந்ததைக்‌ கண்டு அந்த மக்களின்‌ துயர்‌ துடைப்பதற்கென்று, மறைந்த மனிதாபிமான பெருந்தகை, போற்றுதலுக்குரிய பென்னி குவிக்‌ அவர்கள்‌ தனது சொந்த செல்வத்தையும்‌ வழங்கி கட்டிய அணை முல்லைப்‌ பெரியாறு அணையாகும்‌.

முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ நீர்‌ தேக்கப்பட்டு, அந்தத்‌ தண்ணீர்‌ மேற்சொன்ன 5 மாவட்டங்களுக்கும்‌ வழங்கப்பட்டதன்‌ காரணமாகத்‌ தான்‌ அந்தப்‌ பகுதிகளில்‌ விவசாயம்‌ செழித்தது; வறுமை நீங்கியது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு விவசாய வேலை வாய்ப்புகள்‌ கிடைத்தன. எனவே, முல்லைப்‌ பெரியாறு அணையும்‌, அதில்‌ தேக்கப்படும்‌ தண்ணீரும்‌ தமிழ்‌ நாட்டின்‌ பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாய்‌ விளங்குகின்றன என்பதை எப்பொழுதும்‌ நினைவிற்கொண்டு தமிழ்‌ நாடு அரசு செயல்பட வேண்டும்‌.

முல்லைப்‌ பெரியாறு அணை தமிழகத்திற்கு உரியது என்பதையும்‌; அந்த அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும்‌; அது எப்பொழுதும்‌ தமிழ்‌ நாடு அரசின்‌ கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும்‌ என்பதையும்‌; முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ 152 அடி தண்ணீர்‌ தேக்கப்படுவது சாத்தியமானது என்பதையும்‌; அதன்‌ விளைவாக, தமிழகத்தின்‌ 5 மாவட்டங்கள்‌ பெரும்‌ பயனடையும்‌ என்பதையும்‌, அசைக்க முடியாத புள்ளி விபரங்களோடு உச்சநீதிமன்றத்தில்‌ எடுத்துரைத்து, வாதிட்டு, வெற்றி பெற்றவர்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ என்பதை வரலாறு நமக்கு கூறிக்கொண்டே இருக்கிறது.

முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ 152 அடி தண்ணார்‌ தேக்கப்பட்டால்தான்‌ தமிழ்‌ நாட்டின்‌ 5 மாவட்டங்களில்‌ 7 லட்சம்‌ விவசாயிகளின்‌ பாசனத்திற்கும்‌, 80 லட்சம்‌ மக்களின்‌ குடிதண்ணீர்‌ தேவைகளுக்கும்‌ போதுமான தண்ணீர்‌ கிடைக்கும்‌ என்பதை பல புள்ளி விவரங்களுடனும்‌, ஆதாரங்களுடனும்‌, உச்சநீதிமன்றத்தில்‌ எடுத்து வைத்து, கடும்‌ சட்டப்‌ போராட்டத்தை நடத்தினார்‌ நம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌.

புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ மேற்கொண்ட அந்த மாபெரும்‌ முயற்சியின்‌ காரணமாக, முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ 142 அடி அளவுக்கு தண்ணீர்‌ தேக்கிக்‌ கொள்ளலாம்‌ என்ற உறுதியான தீர்ப்பை 15 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம்‌ அளித்தது. அணையின்‌ உறுதித்‌ தன்மையை மேலும்‌ நிலைநாட்டிக்கொண்டு, 152 அடி அளவுக்கு தண்ணீர்‌ தேக்கவும்‌ உச்சநீதிமன்றம்‌ தீர்ப்பளித்தது.

புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ சிரமேற்கொண்டு எடுத்த முயற்சிகளால்‌, 2014-ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 7-ஆம்‌ தேதி உச்சநீதிமன்றம்‌ முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ 142 அடி (அதாவது 43,26 மிட்டர்‌) தண்ணீர்‌ தேக்க அனுமதி அளித்தது மட்டுமல்லாமல்‌, 2006-ல்‌ கேரள சட்டமன்றத்தில்‌ 136 அடி மட்டுமே தண்ணீர்‌ தேக்க அனுமதிக்கும்‌ வகையில்‌ திருத்தப்பட்ட சட்டத்தையும்‌ ரத்து செய்து, தமிழ்‌ நாட்டு மக்களின்‌ உரிமையை உறுதிபட நிலைநாட்டியது. அதனைத்‌ தொடர்ந்து மூன்று ஆண்டுகள்‌ 142 அடி தண்ணீர்‌ தேக்கப்பட்டது என்பதை நினைவில்‌ கொள்ள வேண்டும்‌. மேலும்‌, பேபி அணை, சிற்றணை பராமரிப்புப்‌ பணிகள்‌ முடிவடைந்தவுடன்‌ 152 அடி நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம்‌ எனவும்‌, இதற்கு கேரள அரசு எந்தவித மறுப்பும்‌ தெரிவிக்கக்‌ கூடாது எனவும்‌ உச்சநீதிமன்றம்‌ அந்தத்‌ தீர்ப்பில்‌ கூறி உள்ளது.

supreme_court_updatenews360

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ இந்த சரித்திர சாதனைக்கு நன்றி தெரிவிக்கின்ற வகையில்‌, 5 மாவட்ட விவசாயிகள்‌ ஒன்று சேர்ந்து மதுரையில்‌ நடத்திய மாபெரும்‌ நன்றி அறிவிப்பு மாநாட்டில்‌, மாண்புமிகு அம்மா அவர்கள்‌ நேரிலே பங்கேற்றபோது, விவசாயிகளின்‌ அன்பிற்கும்‌, நம்பிக்கைக்கும்‌ உரிய ஒரே தலைவராக போற்றி பாராட்டப்பட்டார்கள்‌. ஆனால்‌, மாண்புமிகு அம்மா அவர்களால்‌ தொடர்‌ சட்டப்‌ போராட்டம்‌ நடத்தி பெறப்பட்ட உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பு, இன்றைக்கு கேள்விக்குறியாகி இருப்பதை கைக்கட்டி, வாய்‌ பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசின்‌ மெத்தனப்‌ போக்கு வன்மையாகக்‌ கண்டிக்கத்தக்கதாகும்‌.

152 அடி தண்ணீர்‌ தேக்கப்பட்டால்‌ மட்டுமே கடைமடைப்‌ பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும்‌, குடிதண்ணீர்‌ தேவைகளுக்கும்‌ தண்ணீர்‌ உறுதி செய்யப்படும்‌ என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது. கேரள அரசு மீண்டும்‌, மீண்டும்‌ முல்லைப்‌ பெரியாறு அணை குறித்து உண்மைக்குப்‌ புறம்பாகவும்‌, தவறான தகவல்களின்‌ அடிப்படையிலும்‌ எழுப்பி வரும்‌ பிரச்சனைகளுக்குப்‌ பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர்‌ அணையில்‌ நீர்‌ 138 அடியை நெருங்கும்‌ நேரத்திலேயே கேரள அமைச்சர்கள்‌, அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்‌ நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

Stalin Madurai -Updatenews360

முல்லைப்‌ பெரியாறு அணை தமிழ்‌ நாட்டின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள நீர்த்‌ தேக்கம்‌. அந்த அணையில்‌ நீர்‌ இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள்‌ மற்றும்‌ அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில்‌ மதகுகளைத்‌ திறந்தது, முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும்‌ செயல்‌ என்பதை நீண்ட அரசியல்‌ அனுபவமுடைய அமைச்சர்‌ திரு. துரைமுருகன்‌ அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்‌.

முல்லைப்‌ பெரியாறு அணையில்‌ 142 அடி தண்ணீர்‌ தேக்கப்பட்டு, அதன்மூலம்‌ தென்‌ தமிழ்‌ நாட்டின்‌ 5 மாவட்டங்களில்‌, குறிப்பாக கடைமடைப்‌ பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ பாசனத்திற்கும்‌, குடிநீர்த்‌ தேவைக்கும்‌ போதுமான தண்ணீர்‌ இருப்பதை உறுதி செய்வதற்கு இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ முன்னெடுத்த சட்ட ரீதியிலான போராட்டங்களை நினைவில்‌ கொண்டு, அப்போராட்டங்களின்‌ மூலம்‌ பெறப்பட்ட உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பை நிலைநாட்டும்‌ வகையில்‌, தற்போதைய தமிழ்‌ நாடு அரசு உறுதித்‌ தன்மையுடன்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌ என்பதை மீண்டும்‌ மீண்டும்‌ வலியுறுத்துகிறோம்‌.

காவேரி நீர்ப்‌ பங்கீட்டில்‌ தமிழகத்திற்கான உரிமைகளையும்‌; பாலாற்றில்‌ தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும்‌; முல்லைப்‌ பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும்‌, எந்தச்‌ சூழ்நிலையிலும்‌ உறுதி குலைந்துவிடாமல்‌ தமிழக விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை மனதில்‌ கொண்டு செயல்படுவது மிகவும்‌ இன்றியமையாத கடமை என்பதை திமுக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்‌.

தேனி, மதுரை, திண்டுக்கல்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ ஆகிய 5 மாவட்டங்களின்‌ திமுக அரசு காட்டும்‌ எனோதான மனநிலையையும்‌ கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வருகின்ற 09.11.2021 – செவ்வாய்க்‌ கிழமை காலை 11 மணியளவில்‌ தேனி, மதுரை, திண்டுக்கல்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ ஆகிய
5 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டங்கள்‌ நடைபெறும்‌.

EPS OPS - Updatenews360

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌” பேரறிஞர்‌ அண்ணா புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ வழியில்‌ மாநில சுயாட்சி உணர்வுகளோடு தமிழ்‌ நாட்டு மக்களின்‌ நலன்‌ காக்க எப்பொழுதும்‌ முன்களச்‌ செயல்‌ வீரர்களாகப்‌ பணியாற்றும்‌ இயக்கம்‌ என்பதை தமிழக மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌. எனவே, தேனி, மதுரை, திண்டுக்கல்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ ஆகிய 5 மாவட்டங்களைச்‌ சேர்ந்த மக்களின்‌ வாழ்வாதார உரிமைகளைக்‌ காக்க, கழகத்தின்‌
கழக நிர்வாகிகளும்‌, பொதுமக்களும்‌ பெருந்திரளான அளவில்‌ கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 485

0

0