ஒரே நாளில் ‘U Turn’ அடித்த கேரளா… கடும் அதிர்ச்சியில் திமுக அரசு : கொந்தளிக்கும் தமிழக விவசாயிகள்!!

Author: Babu Lakshmanan
8 November 2021, 4:44 pm
Mullai = kerala - updatenews360
Quick Share

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள155 அடி உயர முல்லைப் பெரியாறு அணையால் தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் வசதியை பெறுகின்றன. மேலும் 10 லட்சம் விவசாயிகள் தங்களின் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையின் நீரையே நம்பி உள்ளனர். இந்த அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

mullai dam - updatenews360

2014-ம் ஆண்டு 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அணை திறப்பு

இந்தநிலையில்தான் கடந்த வாரம், தமிழக அரசின் அனுமதியை பெறாமல் அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே இடுக்கி அணைக்கு தண்ணீரை கேரளா அரசு திறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, சக்கரபாணி ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மத்திய நீர்வள ஆணையம் கொண்டு வந்த ‘ரூல் கர்வ்’ என்னும் புதிய விதி முறையின் அடிப்படையில்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பேபி அணையை பலப்படுத்த 3 மரங்களை வெட்டுவதற்கு 7 ஆண்டுகளாக அனுமதி பெற முடியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் நாங்கள் அனுமதி பெற்று விடுவோம்” என்று தெரிவித்து இருந்தார்.

கேரளாவுக்கு நன்றி

இப்படி தண்ணீர் திறந்து விடப்பட்ட பிரச்சினையே இன்னும் ஓயாத நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையேயும் தற்போது, இன்னொரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை பலப்படுத்தும் விதமாக 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்ததாக அண்மையில் தகவல் வெளியானது.

இது தமிழகத்திற்கு மிகவும் சாதகமான அம்சம் என்பதால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ஒரு கடிதமும் எழுதினார்.

CM stalin Order - Updatenews360

அதில், “முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கி இருப்பது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது.

இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும் கேரள முதலமைச்சருக்கும், தமிழக அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது, இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும், அவர்களுக்கிடையே நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புகிறேன்.

முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளையும் விரைவுபடுத்தவேண்டும். மேலும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சருக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

போர்க்கொடி

இந்த நிலையில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதித்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், முல்லைப் பெரியாறு அணை அருகே, மிகப்பெரியதொரு அணையை கட்ட வேண்டும் என்பதுதான் கேரளா அரசின் திட்டம். அதற்காகத்தான் “முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது, இடிந்து விழுந்தால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் 35 லட்சம் மக்களின் உயிருக்கும் ஆபத்து” என்று தொடர்ந்து கூறிவருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை பலப்படுத்தினால் தமிழகத்திற்கு அதிக நன்மை கிடைக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

Vijayan - updatenews360

எனவேதான் பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கிய விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த கேரள அரசு, பேபி அணையில் மரங்களை வெட்ட மாநில வனத்துறை வழங்கிய அனுமதியை 24 மணி நேரத்தில் ரத்து செய்து விட்டது.

எங்களுக்கு தெரியாது

இதுதொடர்பாக கேரள வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் கூறும்போது, “இந்த உத்தரவு வழக்கத்துக்கு மாறான ஒன்று. உத்தரவை பிறப்பித்த முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தரப்பில் நிறைய குளறுபடிகள் உள்ளது. இப்படி மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்தது பற்றி எங்கள் அரசுக்கு எதுவும் தெரியாது. அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் முதலில் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் இந்த முடிவு பற்றி முதலமைச்சர் அலுவலகத்துக்கோ, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அலுவலகத்துக்கோ அல்லது எனது அலுவலகத்துக்கோ எதுவுமே தெரியாது.

இதில் ஏதோ பெரிய அளவில் குளறுபடி நடந்துள்ளது. வெளியான செய்திகளின்படி பேபி அணையில் 15 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் விரிவான அறிக்கை கேட்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேபி அணையில் மரங்களை வெட்டும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

திமுக அதிருப்தி

இதுபற்றி அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, “கேரள அரசின் இந்த முடிவு நம்புவதற்கு கடினமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கு தெரியாமலா
பேபி அணையில் மரங்களை வெட்ட அனுமதித்தனர். இது என்ன நிர்வாகம்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

durai murugan - updatenews360

5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணையில் துணை ராணுவத்தை நிறுத்தினால்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஏனென்றால் கேரள அரசின் மீதான நம்பகத்தன்மை அடியோடு கேள்விக்குறியாகிவிட்டது”
என்று ஆவேசப்பட்டனர்.

அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “தமிழகத்தில் இருந்து முட்டை, காய்கறி, பால் என்று எவ்வளவுதான் அத்தியாவசியப் பொருட்களை கேரள மக்கள் வாங்கினாலும் கூட முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை வாயே திறக்காதது வேதனை தரும் விஷயம்” என்று கவலை தெரிவித்தனர்.

Views: - 438

0

0