ஊழியரை அடித்துக் கொன்ற வழக்கு : கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் விதிப்பு
Author: Babu Lakshmanan13 October 2021, 12:46 pm
சென்னை : முந்திரி ஆலை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த கோவிந்தராசு என்பவர் கடந்த செப்.,20ம் தேதி கொலை செய்யப்பட்டார். திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது நெருங்கிய நபர்கள் சேர்ந்து, கோவிந்தராசுவை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், திமுக எம்பி ரமேஷ் இந்த கொலையை செய்துள்ளார் என்பதை உறுதி செய்து வழக்கும்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இன்றுடன் அவரது காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கடலூர் எம்பியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திமுக எம்பிக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவரை காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார், கொலை தொடர்பாக விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
0
0