துப்பாக்கி முனையில் நகை பறிப்பு: ஏரியில் பதுங்கிய வடமாநில கொள்ளை கும்பல்….போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!!

Author: Aarthi Sivakumar
11 October 2021, 3:41 pm
Quick Share

காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகையை பறித்துச் சென்ற வடமாநில கொள்ளையன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் நேற்று துப்பாக்கி முனையில் 6 சவரன் நகையை வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளன. அதனைத் தொடர்ந்து அப்பெண்மணி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடிச் சென்றனர். அதேபோல் போலீசாருக்கும் தகவல் கூறப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான போலீசார் உடனடியாக வந்தனர்.


வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், நகையைக் கொடுக்கவில்லை என்றால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் நகையைக் கழற்றி கொடுத்ததாகவும் பெண்மணி தெரிவித்துள்ளார். துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சுங்கச்சாவடியின் பின்பகுதியில் இருக்கக்கூடிய ஏரி பகுதி வனப் பகுதியாக உள்ள நிலையில், அந்த பகுதி வழியாகத்தான் கொள்ளையர்கள் ஓடினார்கள் என்ற தகவல் தெரிய வர, போலீசார் ஏரியை ஒட்டிய வனப்பகுதியில் 5 மணி நேரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையன் ஒருவனை போலீசார் என்கவுட்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும், 2 கொள்ளையர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 550

0

0