மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடனுதவி : முன்னாள் நிதியமைச்சர் வரவேற்பு

27 April 2020, 11:40 am
reserve bank - updatenews360
Quick Share

டெல்லி : மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் பொருளாதாரமே வேரோடு சரிந்துள்ளது. அனைத்து முன்னணி நாட்டு நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் தாக்கத்தை சொல்லவா வேண்டும். அதுவும் கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளன.

இந்தியாவிலும் கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தொழில்கள் முடக்கப்பட்டு, பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. இதனால், சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி கடன் பெற்றவர்களுக்கென பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளன.

இந்த நிலையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ. 50,000 கோடி கடன் உதவி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஊரடங்கின் எதிரொலியாக, பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் 6 திட்டங்கள் முடங்கியதை தொடர்ந்து, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, நிலையை ஆராய்ந்து ரிசர்வ் வங்கி இந்த கடனுதவியை அறிவித்துள்ளது.

மேலும், நிலையான ரெப்போ விகிதத்தில் 90 நாட்கள் ரெப்போ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

chidambaram updatenews360

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கடனுதவி நடவடிக்கைக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நிலைமையை கவனத்தில் கொண்டு, இந்த கடனுதவி அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.