நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணையலாம்…! அழைப்பு விடுத்த அமைச்சர்
4 August 2020, 12:37 pmமதுரை: அதிமுகவில் நயினார் நாகேந்திரன் சேர விருப்பம் தெரிவித்தால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.
தமிழக பாஜகவில் அண்மையில் கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. காரணம் பதவிகளை எதிர்பார்த்து பல முக்கிய பிரமுகர்கள் காத்திருந்தனர்.
பட்டியலில் அதிர்ச்சிக்கரமான விஷயங்களும் இருந்துள்ளன. திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய வி.பி. துரைசாமிக்கு துணை தலைவர் பதவி தரப்பட்டு இருந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அக்கட்சியின் துணை தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் பதவிக்காக காத்திருந்தார்.
அந்த பதவி கிடைக்காததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. கூடிய விரைவில் பாஜகவில் இருந்து விலகி அதிமுக செல்ல போவதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனும் தமது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். பாஜக தலைமை மீது நான் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். கட்சியின் நிர்வாகிகள் நியமனம் கடும் வேதனை தருகிறது.
எனவே இது ஒரு காரணம் என்று கூறி நான் பாஜகவில் இருந்து விலகிவிடுவன் என்ற தகவல்களில் உண்மை இல்லை என்றார். இந் நிலையில், அவர் அதிமுகவுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது: நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வந்தால் அதற்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்.
அவருடன் இருந்த அனைவரும் ஏற்கனவே அதிமுகவுக்கு வந்துவிட்டனர். தமிழகத்தில் நாங்கள் மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்று கூறினார்.