7 பேர் விடுதலை விவகாரம் : வலுக்கும் ஸ்டாலின் – ராகுல் மோதல்..? கேஎஸ் அழகிரிக்கு ‘செக்’ வைத்த திமுக..!!

12 November 2020, 7:29 pm
DMK -congress alliance - updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு தமிழர்களின் விடுதலைப் பிரச்சினையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டபின், இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய இதுவரை செய்துள்ள முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ராகுல்காந்தியின் உத்தரவு இல்லாமல் அழகிரியே அறிக்கை வெளியிட்டிருந்தால் அழகிரி பதவிநீக்கம் செய்யப்படுவாரா என்று திமுக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக பல தமிழர் அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருகிறது.

rajiv case - UpdateNews

2014-ஆம் ஆண்டு அவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜீவ்காந்தியின் மகனுமான ராகுல்காந்தியின் தலையீட்டால், அப்போதைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்த உத்தரவுக்குத் தடைபெற்றது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையில் எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.

ஏழு தமிழர் விடுதலையில் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று திமுகவின் கூட்டணியில் இருக்கும் வைகோவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தபின் திமுக தலைவர் ஸ்டாலினும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

எதிர்பாராதவிதமாக ஸ்டாலினின் கருத்தை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டார். ஏழு பேர் விடுதலை தொடர்பாக அரசியல் கட்சியினர் கோரிக்கை வைக்கக்கூடாது என்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Rajiv-Gandhi-assassination-case - congress - - updatenews360

அழகிரியின் அறிக்கை ஸ்டாலினை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராகுல்காந்திக்குத் தெரியாமல் அழகிரி திமுகவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்க முடியாது என்று திமுக தலைவர்கள் கருதுகின்றனர். ராகுல்காந்தியின் உத்தரவுப்படி, இந்த அறிக்கை வந்திருக்கவே பெரிதும் வாய்ப்புள்ளது. ஏழு தமிழர்களை விடுதலை செய்வதை மீண்டும் ராகுல்காந்தியும், சோனியாகாந்தியும் தடுக்க நினைக்கிறார்கள் என்று தமிழக மக்களும் நினைக்கின்றனர்.

ஏற்கனவே, காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் இலங்கைத் தமிழர் படுகொலை, காவிரி, முல்லைப்பெரியாறு நீட், மீத்தேன் திட்டங்கள் ஆகியவற்றில் திமுக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. இப்போது, ஏழு தமிழர் விடுதலையை எதிர்த்து அரசியல் செய்வதாலும், கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்பதாலும் காங்கிரசைக் கழற்றிவிடும் முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

mk-Stalin-ks-alagiri - updatenews360

திமுகவின் நிலைப்பாட்டை வலியுறுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகனும், அமைப்பு செயலாளரும் பேட்டி அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய அழகிரி மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஸ்டாலினை சந்திக்க அனுமதி கிடைக்காத சூழலில் பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி திமுகவின் கருத்தைத் தான் எதிர்க்கவில்லை என்றும், “இது சுதந்திரக் கூட்டணி. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம்” என்றும் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதுபோல் திமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. ராகுல்காந்தி உத்தரவில்லாமல் அழகிரி பேசியிருந்தால் அழகிரியை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு திமுக தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

stalin-rahul- updatenews360

திமுக சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை எதுவும் தற்போது இல்லாத நிலையில் திமுக இதுகுறித்து தனது கருத்தை இதுவரை வலியுறுத்தவில்லை. ஆனால், திமுகவை சமாதானப்படுத்த மத்திய காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினுடன் விரைவில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பாலமாக இருந்த குலாம் நபி ஆசாத், தற்போது ராகுல்காந்தியால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே முன்போல் நெருக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் வேறு ஏதேனும் தலைவர்கள் ஸ்டாலினுடன் பேசினால் அழகிரியை நீக்குமாறு அவர் கோரவேண்டும் என்று திமுக தலைவர்கள் எண்ணுகிறார்கள்.

திமுகவுக்கு எதிராக அழகிரி அறிக்கை வெளியிடுவது இது முதல் முறையல்ல. உள்ளாட்சித் தேர்தல் பங்கீட்டில் திமுக காங்கிரசை உதாசீனப்படுத்தியது என்று அவர் வெளியிட்ட அறிக்கை திமுகவினரைக் கொந்தளிக்கவைத்தது. அப்போது, அழகிரி உடனடியாக ஸ்டாலினை சந்தித்து சமாதானப்படுத்தினார். இப்போது, அதுபோன்ற முயற்சிகள் பலிக்கவில்லை என்பதால், அழகிரி தனியாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அழகிரியை நீக்காவிட்டால், தேர்தல் உடன்பாடு பேசுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கடைசி நேரத்தில் கூட்டணி முறியலாம் என்றும் கருதப்படுகிறது.

Views: - 24

0

0