‘இது தியாகங்களின் தினம்… தியாகிகளின் வனம்…’ : தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்..!

1 July 2020, 8:06 am
doctors cover - updatenews360
Quick Share

மருத்துவம் என்பது ஒரு காலத்தில் மனிதர்களிடம் பணம் பறிக்கும் ஒரு வேலையாக கருதப்பட்டது. தங்களுடைய கடுமையான நோய்களின் மத்தியில் வரும் நோயாளிகளிடம் இரக்கமற்று பேசி, வருவாய் ஈட்டும் மருத்துவர்கள் நிறைந்த உலகமாக கருதப்பட்ட மருத்துவ உலகம், இன்று தியாகிகள் நிறைந்த உலகமாக திசை மாறி நிற்கிறது.

சாதாரணமாக முக கவசம் அணிந்து மூச்சுத்திணறும் நிலையில், உடல் முழுவதும் கவச உடை அணிந்து அதை தாங்க முடியாத சூழ்நிலையில் கூட, பொறுமையாக நோயாளிகளை கவனிக்கிற மருத்துவருடைய மனநிலையை பார்க்கும்போது மனசுக்குள் ஈரம் கசிகிறது.

doctors 2- updatenews360

இதனால் நோய் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவர் தன் இறுதித் தருணத்தில் தன் குழந்தைகளிடம் மனைவியிடம் தூரத்திலிருந்து கைகாட்டி எதோ ஊருக்கு போய் வருவது என்று சொல்வதைப்போல, மரணத்தைச் சந்திக்க செல்லும் மகத்தான பதிவுகளையும் மருத்துவ உலகம் சந்தித்து இருக்கிறது.

அந்த தனிமைப்படுத்தல் என்பது கொடுமையான விஷயமாக இருந்தாலும், நோயாளிகளுக்கு அந்தக் கொடுமையிலிருந்து அவ்வப்போது விடுதலை தந்து, நாங்கள் இருக்கிறோம் நம்புங்கள் என்று தெம்பூட்டி, அவர்களை மீண்டும் உயிரோடு உலவ விடுவது மருத்துவர் கையில் உள்ளது. மருத்துவத்துறை இன்று சவாலான ஒரு நோயை எதிர்த்து போராடுகிறது.

எல்லையில் நிற்கும் எல்லை பாதுகாப்பு வீரன் எப்படி எல்லையை பாதுகாக்க போராடுகிறானோ, அதைவிட தீவிரமாக நோயாளியை தன்பக்கம் நிறுத்தி, எதிரே நிற்கும் கொரோனாவை மருத்துவ சாதனங்களால், சாதுர்யங்களால் எதிர்த்து யுத்தம் நிகழ்த்துகிறார். மனிதனின் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையும் கவனிக்கத்தக்கது.

அதற்கேற்ப தங்கள் நேரங்களை அவர்களை குணம் ஆக்குவதற்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு மருத்துவ உலகத்தை இப்போது தான் உலகம் சந்தித்து இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிவதற்கு, வீடுகளில் குளுக்கோ மீட்டர்கள் உள்ளன. இதயத்தில் இருந்து வருகிற ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிய ஆக்சிமீட்டர் வீடுகளில் வாங்கி வைக்க தொடங்கிவிட்டோம்.

ஆனால் கொரோனாவிற்கு எதிரான விசயத்தில் மிகப்பெரிய புதிர் இதுதான். அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
தடுப்பூசி தயாராகவில்லை. ஆனாலும் நோயாளிகள் குணமடைகிறார்கள். எப்படி?

மருத்துவ உலகம் இதேபோல் உள்ள நோய்களுக்கு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை ஒப்பீட்டளவில் கண்டறிந்து அந்த மருந்தை இதற்கும் பயன்படுத்தி சாதனை புரிந்து இருக்கின்றனர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப்போல
கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் நோயை குணப்படுத்தும் பணிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாபெரும் சாதனை நிகழ்த்துகிறார்கள்.

கொரோனா காலத்தில் மருத்துவர்களின் அனுபவங்கள் நம்மை குலைநடுங்க வைக்கும். ஆனாலும் தைரியத்துடன் விடாமுயற்சியுடன் பணியாற்றுகின்றனர்.

இனிவரும் நாட்களில் பல்வேறு சோதனைகளை சந்திக்க இருக்கிறது. இது இந்தியா மட்டுமல்ல… சர்வதேசத்திலும் உள்ள மருத்துவர்கள் உடைய நிலைதான். ஆகவே மருத்துவர்களை கொண்டாடுவோம். ஆரோக்கியமான வாழ்வு நம்மை அரவணைக்க ஒத்துழைப்பு கொடுப்போம். இது மருத்துவர்களின் தினம், அவர்களின் மகோன்னதங்களை போற்றுவோம்.

Leave a Reply