நீட் தேர்வு வேண்டாம் என்பதே மெஜாரிட்டி… 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்த ஏகே ராஜன் குழு..!!!

14 July 2021, 11:33 am
ak rajan - neet - updatenews360
Quick Share

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை சமர்ப்பித்தது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

இதனையடுத்து, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

இக்கருத்துகளை, அந்த குழு ஆய்வு செய்தது. இதற்கிடையில், ஏ.கே. ராஜன் குழு அமைத்ததை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஏகே ராஜன் பேசியதாவது :-
165 பக்கம் கொண்ட ஆய்வறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான முக்கிய அம்சங்கள் முதலமைச்சரிடம் விளக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வறிக்கையை வழங்குவது மட்டும் தான் எங்களுடைய பணி. அதனடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எங்களால் சொல்ல முடியாது. மற்றவைகள் எல்லாம் தமிழக அரசு தான் தெரிவிக்கும், எனக் கூறினார்.

Views: - 112

0

0

Leave a Reply