நீட் தேர்வு : ஏகே. ராஜன் தலைமையில் குழு அமைத்தது செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

13 July 2021, 4:40 pm
Quick Share

சென்னை : நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாஜக பொதுசெயலாளர் கரு.நாகராஜன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். யுகத்தின் அடிப்படையிலும், அரசியல் நோக்கதுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இதனிடையே இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க கோரி மாணவர்கள், திமுக, மதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாஜக அரசியல் நோக்கத்திற்காக இந்த வழக்கை தொடுத்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், மாணவர்கள், அரசியல் கட்சியினரிடம் தனித்தனியே வாதங்கள் பெறுவதற்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறியதாவது ;- நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் குழு இல்லை. மக்கள் கருத்து கேட்பு தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

தமிழக அரசு அமைத்த குழுவின் மூலம் நீட் தேர்வினால் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மாணவர் சேர்க்கையை மாற்றி அமைக்க கோரலாம், எனக் கூறினார்.

Views: - 85

0

0

Leave a Reply