அரியலூர் மாணவனின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!

10 September 2020, 12:44 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், திட்டமிட்டபடி நாடு முழுவதும் வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன் விக்னேஷும் நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். ஆனால், தேர்வு குறித்த பயத்தினால், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்த அவர், நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தேர்வு அச்சத்தால் அனிதாவை தொடர்ந்து மாணவன் விக்னேஷின் உயிரும் பறிபோனதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலையில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் விக்னேஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவனின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும், மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பது வேதனையளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0