அதிரடி எதிர்க்குற்றச்சாட்டுகளை வைத்து ஸ்டாலினைத் திணறடித்த அதிமுக!! நீட் தேர்வு விவாதம் ஒரு பார்வை..!

16 September 2020, 3:29 pm
Cm attack dmk - updatenews360
Quick Share

சென்னை: நீட் தேர்வுப் பிரச்சினையில் 13 மாணவர்கள் தமிழ்நாட்டில் தற்கொலை கொண்டதைப் பெரிய அளவில் சட்டமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு கடும் நெருக்கடி தரலாம் என்று திமுக திட்டமிட்டது. ஆனால், சட்டமன்ற விவாதம் திமுகவுக்கே நெருக்கடியாக முடிந்தது. தற்காப்பு வாதங்களில் அதிமுக இறங்கும் என்று திமுக எதிர்பார்த்தற்கு மாறாக அதிரடியாக எதிர்க்குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுக்கியது எதிர்க்கட்சிக்கு கடும் சவாலாக அமைந்தது. மேலும், அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ இடங்களை ஒதுக்கி அதிமுக அரசு சட்டம் இயற்றியதும் திமுகவின் திட்டத்தை மழுங்கடித்தது.

நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் நீட் பிரச்சினையை எழுப்புவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்பே தெரிவித்திருந்தார். தேர்வுக்கு முன்னர் 3 மாணவர்கள் உட்பட தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் நீட் பிரச்சினையில் தற்கொலை செய்துகொண்டிருந்தது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சட்டமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்பி அதிமுக அரசைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிட்டு, முதல் நாள் கூட்டத்திலேயே நீட் பிரச்சினையில் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தது.

பாஜக அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் மத்திய அரசுடன் அதிமுக அரசுக்குப் பிரச்சினை ஏற்படும். தீர்மானம் கொண்டுவராவிட்டால் நீட் விவகாரத்தில் பாஜக அரசை எதிர்க்க அதிமுக அரசு தயங்குகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாஜகவுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சுமத்தி பாஜக மீதான கோபத்தை அதிமுக மீது திருப்பலாம் என்று திட்டமிட்டு, திமுக சட்டமன்றத்தில் நீட் பிரச்சினையில் மத்திய அரசின் மீதான கண்டனத் தீர்மானமாகக் கொண்டு வந்திருந்தது. எப்படிப்பார்த்தாலும் அதிமுகவுக்கு சிக்கல் என்ற நிலையில் கடும் நெருக்கடி தருவதற்கு திமுக திட்டமிட்ட நிலையில், அதிரடியாக எதிர்த்தாக்குதல் தொடுத்து திமுகவைத் திணறடித்தது ஆளுங்கட்சி.

முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வலுவான குற்றச்சாட்டுகளை திறமையுடன் அடுக்கடுக்காக உணர்ச்சிகரமாக முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பேச்சு இதுவரை அப்பிரச்சினையில் அவர் பேசிய பேச்சுகளின் வலுவற்ற உணர்வற்ற தொகுப்பாகவே இருந்தது. விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, நீட் தேர்வை முதன்முதலில் காங்கிரஸ் அரசே கொண்டுவந்தது என்பதை நினைவுப்படுத்தினார். காங்கிரசைப் பாதுகாக்கும் நிலையில் இல்லாத ஸ்டாலின், திமுக நீட் தேர்வை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறும் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டார். உடனடியாகக் குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போதைய மத்திய அரசில் திமுகவும் இருந்தது என்று பிடியை இறுக்கினார்.

Cm eps in assembly - updatenews360

தொடர்ந்து இன்பதுரை பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியதை நினைவுப்படுத்தியது விவாதத்தின் போக்கையே மாற்றி திமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியினர் வெளியேற்றப்பட்டபோதும், அவர்களை ஆதரித்துப் பேச முடியாத நிலைக்கு திமுகவினர் தள்ளப்பட்டனர். தொடர்ந்து நீட் தேர்வை பாஜக அரசுதான் திணித்தது என்று ஸ்டாலின் விவாதத்தை தமக்கு ஆதரவான வகையில் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, முதல்வர் குறுக்கிட்டு மீண்டும் நீட் வந்த வரலாற்றைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்பதை வலுவாக முன்வைத்து, நீட் தேர்வை எட்டு மாதங்களில் எப்படி ரத்து செய்வீர்கள் என்று ஸ்டாலினிடம் நேரடியாகக் கேட்டு திமுகவைத் திணறடித்தார்.

நீட் விவாதத்தில் திமுகவின் வியூகத்தைத் தெளிவாக உணர்ந்துகொண்ட அதிமுக முன்பே தெளிவான திட்டத்துடன் சட்டமன்ற விவாதத்தை எதிர்கொண்டது. அனல்பறக்கும்;புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றாமலும், அதேநேரம் பாஜவுக்கு எதிரான கோபத்தையும், குற்றச்சாட்டுகளையும் திமுகவின் கூட்டணிக்கட்சியான காங்கிரசுக்கு எதிராகத் திருப்பியும், திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆளுங்கட்சி.

மேலும், விவாதம் நடைபெறும் முன்னரே அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தகுதிபெறும் 7.5 சதவீதம் பேருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும் என்று சட்டம் நிறைவேற்றி பிரச்சினையின் சூட்டைக் குறைத்திருந்தார் முதலமைச்சர் பழனிசாமி. அந்த ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் திமுக உறுப்பினர் மாசிலாமணி கோரிக்கை வைத்தது அரசின் திட்டத்துக்கு மறைமுகமான பாராட்டாகவே அமைந்தது.

Views: - 15

0

0