நீட் தேர்வில் தேசிய அளவில் திமுகவை ஆதரிக்காத காங்கிரஸ் : நீட்-டை வைத்து அரசியல் செய்வதாக விமர்சனம்..!

14 September 2020, 8:07 pm
neet exam congress - updatenews360
Quick Share

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்றும், நீட்டை எதிர்த்து வலுவாகக் குரல் எழுப்புவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், திமுகவின் கோரிக்கையை அகில இந்திய அளவில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் இடதுசாரிகளும் ஆதரிக்காத நிலையே இருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பினார். ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அது குறித்துப் பிரச்சினை எதுவும் எழுப்பாமல் அமைதி காத்தது. நீட் தேர்வைப் பொறுத்துவரை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே அதை எதிர்த்துப் பேசிவருகிறார்கள். ஆனால், காங்கிரசின் மத்திய தலைவர்கள் நீட் தேர்வை எதிர்த்து கருத்து எதுவும் வெளியிடவில்லை.

stalin neet mask - updatenews360

திமுகவுடன் சேர்ந்து எப்போதும் பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கேரளாவில் இருந்து பெருமளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் திமுகவுக்கு ஆதரவாக நீட் பிரச்சினையில் இதுவரை பேசவில்லை. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட தமிழ்நாட்டில் மட்டுந்தான் நீட்டை எதிர்த்துப் பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிக அளவு மருத்துவக்கல்லூரிகள் இருக்கும் நிலையில், அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வால் தமிழகத்தில் இருக்கும் மருத்துவ இடங்களை மற்ற மாநிலத்தவர் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும், இடதுசாரிகளும் நீட் தேர்வை ஆதரிப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் குறைவாகவும் மருத்துவ இடங்கள் குறைவாகவும் இருப்பதால் நீட் தேர்வு மற்ற மாநில மாணவர்களுக்குப் பெருமளவில் பயன்படுகிறது. தமிழ்நாடு அரசு பெருஞ்செலவில் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புகள் தங்கள் மாணவர்களுக்குப் பயன்படுவதால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளாய் இருந்தும் காங்கிரசோ, இடதுசாரிகளோ தேசிய அளவில் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள்.

Neet Exam -Updatenews360

நீட் தேர்வையே காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் நடைமுறைப்படுத்தியது. அக்கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. மத்திய அமைச்சரவையிலும் அக்கட்சி இடம் பிடித்திருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது 2013-ஆம் ஆண்டுதான் நீட் தேர்வு முதல்முறையாக நடத்தப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வரான ஜெ.ஜெயலலிதா நீட் தேர்வு குறித்த தொலைநோக்குப் பார்வையுடன் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை.

தற்போது, நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் எழுந்துள்ள சூழலில் திமுக நீட் தேர்வை ஒழிப்பதாக உறுதி கூறிவருகிறது. அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக சாடிவரும் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசும், இடதுசாரிகளும் மாநிலத்திலும் தேசிய அளவிலும் எடுத்துவரும் இரட்டைநிலை குறித்து கண்டுகொள்ளாமல் அவற்றைக் கூட்டணியில் தொடர்ந்து வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் தேசியக்கட்சிகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பேசிவருகின்றன. நாடாளுமன்றம் போன்ற தேசிய அளவிலான விவாத அரங்குகளில் திமுகவை ஆதரிப்பதில்லை என்ற நிலையே நீடிக்கிறது.