நீட் ரத்துக்கு ஆதரவு லெட்டர் வரும்… ஆனா வராது…! பதற்றத்தில் தமிழக மாணவர்கள்!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 1:23 pm
Neet - updatenews360
Quick Share

தேர்தல் வாக்குறுதி

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட்தேர்வை ரத்து செய்வதுதான், இதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்.

இப்படி தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தீவிர பிரச்சாரம் செய்தது. கட்சியின் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி என அத்தனை தலைவர்களுமே இந்த வாக்குறுதியை மூலை முடுக்கெல்லாம் தமிழக மக்களுக்கு அளித்தனர். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது, நீட் தேர்வு ரத்து என்ற தனி தலைப்பில் 160-வது வாக்குறுதியாக இடம் பிடித்திருந்தது.

Stalin Olympic- Updatenews360

உதயநிதி இதற்காக அப்போதைய அதிமுக அரசை மிகக் கடுமையாகவும் விமர்சித்தார். ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இதை செய்து இருப்பார்கள். எங்களுக்கு மட்டுமே இந்த தேர்வை ரத்து செய்வது எப்படி? என்கிற ரகசியம் தெரியும். அதற்கான ஆளுமை எங்கள் தலைவருக்குத்தான் உண்டு என்றும் ஆவேசமாக முழங்கினார்.

குழு மட்டுமே அமைப்பு

திமுக கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் முக்கிய காரணமாக இருந்தது. ஏனென்றால் சுமார் 4 லட்சம் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் தங்கள் வீட்டில் ஒரு டாக்டர் இருப்பார் என்று கனவும் கண்டனர். அந்த நம்பிக்கையில் பெருமளவில் திமுக கூட்டணிக்கு அவர்கள் வாக்களித்து இருப்பார்கள் என்பதும் நிச்சயம்.

அதனால் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ak rajan - neet - updatenews360

ஆனால் திமுக அரியணையில் அமர்ந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு சட்ட மசோதாவையும் முதல் கூட்டத்தொடரில் இயற்றவில்லை. மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

தற்கொலைகள்

இந்த நிலையில்தான் கடந்த மாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது.
தமிழகத்தில் இருந்து இந்த தேர்வை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.

தேர்வு முடிந்த மறுநாள் தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரின் இறுதி நாளன்று நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்ட மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியது.

நீட் தேர்வுக்கு பயந்து தனுஷ் என்ற மாணவனும், தேர்வில் தோல்வி கண்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கனிமொழி, சவுந்தர்யா, அனு என்ற 3 மாணவிகளும் தற்கொலை கொண்ட துயரமும் நடந்தது.

Dharmapuri Neet Suicide - Updatenews360

இதன்பின்னர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தங்களது ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. இந்த நிலையில், தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக ஆளுநர் ரவி வழியாக மசோதாவை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

அந்த சட்ட மசோதா தமிழக ஆளுநரை கடந்து, குடியரசுத் தலைவரிடம் சென்றதா? என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.

12 மாநிலங்களுக்கு கடிதம்

மேலும் கடந்த 4-ம் தேதி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஷ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கோவா என 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் அலுவல் ரீதியாக கடிதமும் எழுதினார். அதனுடன் ராஜன் குழுவின் ஆய்வறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில், “நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே எங்களது நிலைப்பாடு. இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று கருதுகிறோம்.

இக் கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுள்ள ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களிலும் சமூகத்தின் விளிம்பு நிலையிலும் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்குமாறு எதிர்நோக்குகிறோம்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

பதில் இல்லை

அதுமட்டுமன்றி திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் இந்த 12 மாநிலங்களின் முதலமைச்சர்களையும் நேரில் சந்தித்து,கடிதத்தை கொடுத்து அவர்களின் சம்மதத்தைப் பெற முயற்சி மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் உத்தரவிட்டார். அவர்களும் 12 மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து அந்த கடிதத்தின் நகலை நேரில் கொடுத்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி என 7 மொழிகளில் அந்தக் கடிதங்கள் மொழி பெயர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது.

ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த மாநில முதலமைச்சரும் தமிழக அரசின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து பதில் கடிதம் எழுதியதாக தெரியவில்லை. ஒரு சில மாநில முதலமைச்சர்கள் திமுக எம்பிக்கள் நேரில் சந்தித்தபோது முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக திமுக தரப்பில் கூறப்பட்டாலும் அவர்கள் கடிதம் மூலம் அதை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்னும் ஓரிரு நாட்களில்
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

NEET -Updatenews360

இது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சற்றே பதற வைத்துள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் கிடைக்குமா? என்ற பதைபதைப்புதான் அதற்கு காரணம். எனவே நீட் தேர்வு எழுதி அரசு தொடர்புகொள்ள முடியாத 15 சதவீத மாணவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை கவுன்சிலிங் அளிப்பது மிகவும் அவசியம்.

ஏனென்றால் 12 மாநில முதலமைச்சர்கள் தமிழக அரசுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தால் ஏதாவது ஒரு வகையில் தங்களுக்கு பலன் கிடைக்கும் என்று அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் தமிழக அரசுக்கு ஆதரவாக கடிதம் எழுதாதது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

வாய்ப்பில்லை

இதுகுறித்து சட்டத்துறை வல்லுனர்கள் கூறும்போது, “நீட் தேர்வை ரத்து செய்வது மிகவும் கடினமான காரியம் என்று பிரபல வக்கீல் என்ற அடிப்படையில், திமுக எம்பி
ஆ ராசா ஏற்கனவே தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தே முந்தைய அதிமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் அவர் முன்பு குற்றம்சாட்டி இருந்தார்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினியும், இனிமேல் நீட் தேர்வுக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்று 2017ல் தீர்ப்பு வெளியானபோது குறிப்பிட்டு இருந்தார்.

law - updatenews360

எனவே தமிழக அரசு இப்போது இயற்றியிருக்கும் சட்டமும் அதே போல்தான் உள்ளது என்பதால் இதுவும் அதே தகுதிநிலையைத்தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இனி வரும் ஆண்டுகளிலும் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும். அதற்காக மாணவர்களை தமிழக அரசு இப்போதிலிருந்தே தயார்படுத்த வேண்டும். அவர்கள் நீட்தேர்வில் நல்ல கட் -ஆஃப் மதிப்பெண்கள் பெறும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

அச்சம்

டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பொதுவாக இதுபோன்ற கடிதங்களுக்கு மாநில முதலமைச்சர்கள் உடனடியாக பதில் எழுதி விடுவார்கள். ஆனால் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு 2 வாரங்கள் ஆகியும் அவர்கள் யாரும் பதில் எழுதவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். ஏனென்றால் இந்த விஷயத்தை அவர்கள் அரசியல் ரீதியாகவும் பார்க்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக நீட் தேர்வுக்கு அந்த மாநிலங்கள் தங்களது மாநில மாணவர்களை சிறந்த முறையில் தயார்ப்படுத்தி விட்டன.

இப்போது அவர்கள் தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்களது மாநிலங்களில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல ஆகிவிடும். பாஜக அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால் இது தேர்தலில் தங்களை வெகுவாகப் பாதிக்கும் என்று அந்த மாநில முதலமைச்சர்கள் அச்சப் படுகிறார்கள்.

stalin neet mask - updatenews360

சிலர் கடிதம் கொடுத்த திமுக எம்பிக்களிடம் ஆதரவு தருகிறோம் என்று வாய்மொழியாக கூறி இருந்தாலும் அந்த முதலமைச்சர்களும் கூட முறைப்படி கடிதம் எதையும் இதுவரை எழுதவில்லை என்கிறார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து 4 பேர் திமுகவின் தயவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் அவர்கள் போட்டியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டு எம்பிக்களின் எண்ணிக்கை பூஜ்யம்தான். ஆனாலும்கூட பினராயி விஜயன் தலைமையிலான கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசு நீட் விவகாரத்தில் திமுக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்போது திமுக அரசின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால், 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுகவின் கை ஓங்கிவிடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

தவிர அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்யாத நிலையில் திமுக அரசின் கோரிக்கையை ஏற்கவும் அவர்கள் தயங்குகின்றனர். இது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பதையே காட்டுகிறது.

மேலும் திமுகவை பொறுத்தவரை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று வாக்குறுதி கொடுத்து தேர்தலை சந்தித்துள்ளது. நிறைவேற்றவே முடியாத ஒரு வாக்குறுதியை கொடுத்துவிட்டு இதில் தேவையின்றி நம்மை ஏன் சம்பந்தப்படுத்துகிறார்கள்?… என்கிற ஆதங்கமும் பல முதலமைச்சர்களிடம் உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 244

0

0