நீட் தேர்வு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியனின் அறிவிப்பால் மாணவர்கள் கலக்கம்..!!

18 June 2021, 3:45 pm
ma subramanian - updatenews360
Quick Share

சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனின் அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் சக தலைவர்கள் உறுதியளித்து வந்தனர். பின்னர், தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இதனிடையே, நேற்று பிரதமரை நேரில் சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தினார். பின்னர், சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருடனான சந்திப்பு மனநிறைவை தந்ததாகவும் கூறினார். இதனால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது :- அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆட்சியில்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு, 4 கூட்டங்களை நடத்தியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அவர்கள் அறிக்கை சமர்பிப்பார்கள், எனக் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நீட் தேர்வு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது அவர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 196

0

0