நீட்டுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய நளினிக்காக அமளி!! : சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை ‘ரன் அவுட்’ ஆக்கிய காங்கிரஸ்!!

16 September 2020, 5:22 pm
stalin - nalini - - updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் குரல் கொடுக்கும்போது நீட் தேர்வை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி அத்தேர்வை மீண்டும் நிலைநிறுத்திய வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்தது திமுக தலைவர்களுக்குத் திகைப்பையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி விவாதத்தை திசைதிருப்பியது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நீட் கொண்டுவரப்பட்டது என்று அதிமுக குற்றம்சாட்டிவரும் நிலையில் நீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியதோடு மட்டுமில்லாமல் இனி நீட்டை யாராலும் தடை செய்ய முடியாது என்று பொதுவெளியிலும் பேசிய நளினி சிதம்பரத்தை ஆதரித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடியது அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.

சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.ஆர். ராமசாமி கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருக்கும் நிலையில் நளினி சிதம்பரத்தின் பேரைச் சொன்னால் காங்கிரஸ் உறுப்பினர்கள் நளினியை ஆதரித்து அமளி செய்வார்கள் என்று அதிமுக கணக்கிட்டது. அதிமுக உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை நளினியின் பேரைக்கூறியவுடன் அதிமுக எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் நடந்துகொண்டது. நளினி சிதம்பரம் குறித்து அதிமுக உறுப்பினர் சொன்ன கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நீட் ஆதரவு வழக்கறிஞருக்காகப் போராடியது.

வெறும் எதிர்ப்போடு நில்லாமல் அவையின் மையப்பகுதிக்கே வந்து சபாநாயகரின் இருக்கையைச் சுற்றி முற்றுகைப் போரட்டத்தில் இறங்கியது. அதிமுக விரித்த வலையில் காங்கிரஸ் வகையாக விழுந்ததைக கண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நீட்டுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடியது உண்மைதான் என்பதால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கூடாது என்று காங்கிரஸ் எதிர்ப்புக்கு எண்ணெய் வார்த்தார். நீட் ஆதரவாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி செய்வதைப் பார்த்த திமுக தலைவர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

நீட் அறிமுகப்படுத்தியபோதே அதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சிதம்பரம் ஆகியோரின் பங்கும் இருக்கின்றது என்று கூறப்பட்டது. இதுவரை நீட்டை எதிர்த்து சிதம்பரம் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. திரைப்பட நடிகர் சூர்யா போன்றவர்கள் நீட்டை எதிர்த்துப் பேசிவரும் நிலையிலும் சிதம்பரம் மௌனம் காத்து வருகிறார். சிதம்பரத்தின் மனைவி நளினி நீதிமன்றத்தில் வாதாடி நீட்டை நிலைநிறுத்தியவர்களில் முக்கியமானவர். நளினியின் பெயரை அதிமுக கூறியவுடன் ‘அவர் காங்கிரஸ் உறுப்பினர் அல்ல, அவருக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை’ என்று காங்கிரஸ் கூறியிருந்தால் திமுகவுக்கு காங்கிரஸ் துணைநிற்பதாக அமைந்திருக்கும். குறைந்தபட்சம் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியே சிதம்பரம் ஆதரவாளராக இருந்ததால் தனது நீட் எதிர்ப்பைக் காட்டுவதைவிட தனது கோஷ்டி விசுவாசத்தைக் காட்டுவதே முக்கியம் என்று முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

நளினி சிதம்பரத்துக்குக் கண்டனம் தெரிவிக்காமல் அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடியது நீட் எதிர்ப்பில் அக்கட்சி உறுதியாக இல்லை என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டது. இது நீட் விவகாரத்தில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை என்ற விமர்சனத்தை உண்மையாக்கி அதிமுகவின் குற்றச்சாட்டுகளையும் வலுப்படுத்தியுள்ளது.

ஓர் அணியில் ஓழுங்காக விளையாடிவரும் பேட்ஸ்மேனை எதிர்முனையில் விளையாடிவரும் அதே அணி ஆட்டக்காரர் சொதப்பலாக ஓடி ‘ரன் அவுட்’ செய்ததுபோல் நேற்று காங்கிரஸ் சட்டமன்றத்தில் செயல்பட்டது. காங்கிரசுடன் திமுக 2021 தேர்தலில் கூட்டணி வைப்பது உறுதியாக இருக்கும் நிலையில் மீண்டும் சிதம்பரம் ஆதரவுடன் ராமசாமி போன்றவர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்யும் வேலையை ஸ்டாலினும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பார்க்க வேண்டும். இதே நிலையே தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்டு ஸ்டாலின் ‘ரன் அவுட்’ ஆகிவிடுவோரா என்ற பயம் திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Views: - 0

0

0