தி.மு.க.வினர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என பிதற்றுகிறார்கள்: முதலமைச்சரின் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

14 July 2021, 10:22 pm
eps - stalin - updatenews360
Quick Share

சென்னை: நீட் ஆய்வுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சரின் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டது எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், கமிட்டி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.இந்தத் தீர்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஆட்சியை இழந்த பின்னும் பாஜகவின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதைக் குப்பையில் போடுங்கள் என்று பாஜகவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி சட்டமன்றத்தை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவாக மனுத் தாக்கல் செய்திருப்பதை கண்டிக்க தைரியமில்லாதவர் பழனிசாமி; நீட் தேர்வுக்கு எதிராக இருப்பதாக அவர் சொல்லிக்கொள்வதைப் போல கபட நாடகம் வேறு இருக்க முடியுமா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார். முதலமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். “எங்களை பாதம் தாங்கிகள், பாஜகவின் அடிமைகள் என்றெல்லாம் விமர்சித்துள்ளார் ஸ்டாலின். முன்பு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோது திமுகவினர் எதைத் தாங்கிக் கொண்டிருந்தனர் என திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நொடி ஆகாது” என்று காட்டமாக பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல திமுகவினர் பிதற்றிக்கொள்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Views: - 57

0

0