நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்… 2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு நெருக்கடி..!!

12 September 2020, 5:17 pm
neet - bjp- updatenews360
Quick Share

சென்னை: நீட் தேர்வால் தொடரும் மாணவர் தற்கொலைகள் தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நீட் தேர்வு முக்கிய தேர்தல் பிரச்சினையாக உருவெடுக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆளும் அதிமுகவும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான பாமகவும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அத்தேர்வை விடாப்பிடியாக ஆதரித்து வரும் பாஜகவுடன் அக்கட்சிகள் கூட்டணி சேர்ந்தால், நீட் தேர்வை முக்கிய தேர்தல் பிரச்சினையாக முன்னிறுத்தி நெருக்கடி கொடுக்க திமுக கூட்டணி கட்சிகள் தயாராக இருக்கின்றன.

மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு நாளை நடைபெறும் நிலையில், தமது தற்கொலைக்கு நீட் குறித்த அச்சமும், மன உளைச்சலும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டும், குரல் பதிவு செய்து விட்டும் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அரியலூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இறப்புக்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது மரணம் தமிழ்நாட்டு மக்களிடம் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ள நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அத்தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நீட் தேர்வை விடாப்பிடியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது, கொரோனா பாதிப்பு இருக்கும் சூழலில் இந்த ஆண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனாலும் நீட் தேர்வை நடத்துவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

jee_neet_exams_2020_updatenews360

இந்தியாவிலேயே அதிகப்படியான மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து தமிழக அரசு உருவாக்கியுள்ள மருத்துவக்கல்லூரிகளில், எந்த முறைப்படி மாணவர்களைச் சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் உரிமை தமிழக அரசுக்கோ, தமிழ்நாட்டு மக்களுக்கோ இல்லாத சூழல் நிலவுகிறது. நீட் தேர்வால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், கிராமப்பகுதிகளிலும் படிக்கும் மாணவர்களும் மருத்துவப்படிப்பைப் பற்றி நினைக்கவே முடியாத நிலை உருவாகியுள்ளது.

மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் மிகவும் உயர்வானது என்று ஒருபக்கம் பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அதில் பயின்ற மாணவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் நீட் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சிக்குப் பின்னரே நீட் தேர்வை எழுதுகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாணவர்களே நீட் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு வசதி, வாய்ப்புகள் இல்லாத மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தால்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்றால், சிபிஎஸ்இ பள்ளிகளையும், மாநில அரசுப் பள்ளிகளையும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு மத்திய, மாநில அரசுகள் ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

neet oppose - updatenews360

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படும் வரை கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் கல்வி மாநிலப் பட்டியலில் தான் உள்ளது. கல்வி மாநிலப்பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான், உலகின் நூறு முன்னணி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன என்று கல்வி அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்த நிலையிலும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இருந்ததில்லை.

தொடரும் தற்கொலைகளால் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாநிலத்தை ஆளும் அதிமுகவும் மக்களின் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும் வகையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான பாமக தலைவர் ராமதாஸ் நீட் தேர்வை எதிர்த்து மக்கள் புரட்சி வெடிக்கும் என்று கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக மட்டும் நீட் தேர்வை விடாப்பிடியாக ஆதரித்து வருகிறது.

BJP_flag_UpdateNews360

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் முக்கிய கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் நீட் தேர்வை ஒரு முக்கிய பிரச்சினையாக முன்னிறுத்த திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் மக்கள் இயக்கமான அதிமுக போன்ற கட்சிகளின் கருத்தை, பாஜக புறக்கணித்தால் முக்கிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர்வதில் தயக்கம் ஏற்படவும், பாஜக தனித்துவிடப்படவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

Views: - 9

0

0