நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக்க ரூ.1000 கோடியில் திட்டப் பணிகள் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!

7 August 2020, 2:40 pm
EPS - updatenews360
Quick Share

நெல்லையில் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ரூ. 275 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அவர், கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நெல்லையில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார். தென் மாவட்டங்களில் அதிகமான தொழிற்சாலைகளை கொண்டு வரவேண்டும் என்பதே அரசின் விருப்பம் எனவும், தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ. 8000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரூ.6,448 கோடி செலவில் மேம்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். இதனை தொடர்ந்து, ராதாபுரம் கால்வாய் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்ட அவர், விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நெல்லை மற்றும் தென்சாகி விவசாயிகள், தொழில்துறையினர் அளித்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார். இது மட்டுமின்றி, நெல்லையில் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்படவுள்ளதாகவும், தாமிரபரணி, நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் 4ஆம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலாவது :-நெல்லை, தென்காசியில் கொரோனா சிகிச்சைக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. நெல்லை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானத்திற்கு முன்வர வேண்டும்.

அரசு அமைத்து தரும் குழு அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு முடிவெடுக்கும். EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறையை தற்போது ரத்து செய்ய வாய்ப்பு இல்லை . 2021ஆம் ஆண்டில் யாரை அரியணையில் அமர்த்துவது என்று மக்களே முடிவு செய்வார்கள். எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 9

0

0