நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு தமிழக அரசு அனுமதியா…? புயலைக் கிளப்பும் அரசியல் கட்சிகள்…!!!

3 July 2021, 10:03 pm
neutrino project - updatenews360
Quick Share

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அவ்வப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சினை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டம்.

தற்போது மீண்டும் இத்திட்டம் புத்துயிர் பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதனால்
வழக்கம்போல் ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களது கண்டனக் குரல்களை ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்பாக இத்திட்டம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ரூ.1,320 கோடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் ஊராட்சியில் உள்ள அம்பரப்பர் மலையில் 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு 1500 மீட்டர் ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, 50 டன் எடைகொண்ட உலகின் மிகப்பெரிய மின்காந்தம் அமைக்கவும் திட்டம் இருக்கிறது.

பூமிக்கு வரும் நியூட்ரினோ துகள்களை மட்டும் பதிவு செய்ய 1 கிலோ மீட்டர் நீளம், அகலம், உயரம் போன்றவற்றில் ஒரே அளவு கொண்ட அடுக்குகள் இல்லாத மலைப்பகுதி தேவை. இதற்காகவே தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலை தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுக்கூடம் அமைக்க முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட இடம் நீலகிரி மாவட்டம் சிங்காரா. இது பந்திப்பூர் மற்றும் முதுமலை சரணாலயப் பகுதியாக இருந்ததால் நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்த ஆய்வுக் கூடம் சிங்காராவில் அமைவதற்கு 2009-ம் ஆண்டு அப்போதைய மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி தர மறுத்துவிட்டார்.

இதன்பிறகே இத்திட்டம் தேனி மாவட்டத்திற்கு 2010-ம் ஆண்டு இடமாறியது. மரங்களை வெட்டக் கூடாது; அப்பகுதியில் உள்ள காட்டிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்று
பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்கியது.

“நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும்” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகோ முதல் எதிர்ப்பு

இத்திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதன் முதலில் குரல் கொடுத்தார். 2015-ல் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையில் இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அதுவரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

Vaiko Condemned -Updatenews360

இதன் பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்தத் திட்டத்துக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் 2018-ம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும். ஆனால் காட்டுயிர் வாரியத்தின் அனுமதி பெறாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மே 20-ம் தேதி நியூட்ரினோ ஆய்வு
திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழக வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்தது.

இந்த அனுமதி கிடைத்துவிட்டால், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விடும் என்பதால் அச்சமடைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி இருக்கிறார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றோரும் தற்போது நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு எதிராக திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் அனுமதி கொடுக்கக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டு இருக்கிறது.

காட்டுயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மாநில அரசிடம் சான்று கேட்டு வந்துள்ள டாடா ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்ணப்பத்தைத் தமிழக அரசு ஏற்கக் கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும் என்பது இவர்களது முக்கிய கோரிக்கை.

வைகோ, சீமான், திருமாவளவன் மற்றும் சில அமைப்புகள் திடீரென நியூட்ரினோ ஆய்வுக்கூட திட்டத்தை திடீரென கையில் எடுத்து இருப்பதற்கான காரணம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த 2 வாரங்களுக்குள் அதாவது கடந்த மே மாதம் 20-ந் தேதி டாடா ஆராய்ச்சி நிறுவனம், தமிழக வனத்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறது.

தமிழக அரசு அனுமதியா..?

இந்த மனு மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் 2 வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை, டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் சில தொடங்கி வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதை பிரதமர் சுட்டி காட்டியதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பது என்கிறார்கள்.

இது தெரிந்துதான், தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி விடுமோ என்ற சந்தேகம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எழுந்துள்ளது. மேலும் டாடா ஆராய்ச்சி நிறுவனம், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதில் தீவிரம் காட்டி வருவதால் காட்டுயிர் வாரிய அனுமதியை முதலமைச்சர் வழங்கி விடுவாரோ என்றும் இந்தக் கட்சிகள் கருதுகின்றன.

stalin - pm modi meet - updatenews360

அதேநேரம், முன்பு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளித்த திட்டம்தான் இது என்பதால் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தொடர்பான அத்தனை தகவல்களையும் விரிவாக ஆய்வு செய்த பின்பே இதுபற்றி முதலமைச்சர் இறுதி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், மோடியை சந்தித்த போது ஸ்டாலின் இதுபற்றி எதுவும் பேசவில்லை என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், திமுகவின் கூட்டணி கட்சிகளும், நாம் தமிழர் கட்சியும் தமிழக அரசு முடிவெடுக்க தாமதம் செய்வதை விரும்பாமல் அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. முதலில் வைகோ ஆரம்பித்தார். அதன் பிறகு சீமான் என்று ஒவ்வொருவராக தங்களது குரலை ஓங்கி ஒலித்து வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக எந்த முடிவும் எடுக்காது என்பதே உண்மை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 176

0

0