வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 3 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

11 July 2021, 3:38 pm
Quick Share

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பசலனம் காரணமாக மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai metrology - updatenews360

ஆந்திரா, ஒடிசா இடையே வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

Heavy rain - updatenews360

இன்று மற்றும் நாளை, அந்தமான் கடல் பகுதிகள், தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில், குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று முதல் 13ம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 99

0

0