கட்சி பெயர், சின்னம் விவகாரம்… ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்’ : ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!!

15 December 2020, 3:38 pm
Quick Share

நடிகர் ரஜினிகாந்தின் கட்சி, சின்னம் உள்ளிட்டவைகள் குறித்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நடிகர் ரஜினி ஜனவரி மாதம் தனது கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது அண்ணாத்த பட சூட்டிங்கில் படு பிசியாக உள்ளார். இதனிடையே, மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் பொது சின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாபா படத்தில் இடம்பெற்ற ஹஸ்தா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், தற்போது அந்த சின்னம் ஒதுக்கப்படாததால் ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் ரசிகர்கள் காத்திருக்குமாறு, ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 7

0

0