அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்?….தென்காசி தொகுதிக்கு பாஜக குறி!…

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 9:25 pm
Puthiya
Quick Share

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் ஏற்கனவே 2014ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி ஆகிய இரண்டு மட்டுமே தாங்கள் எப்போதும் பிரதமர் மோடியின் பக்கமே நிற்போம்
என்று உறுதியாக தெரிவித்துள்ளன.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனோ மத்தியில் பாஜக மிக வலிமையான கட்சி, மாநிலத்தில் அதிமுக பெரிய கட்சி என்ற நிலைப்பாட்டில் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவோ, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தெரியாமல் திமுக, அதிமுக, பாஜக என்ன மூன்று கட்சிகளிடமும் ரகசிய பேச்சு வார்த்தையில் இறங்கி இருக்கிறது.

அதேநேரம், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா?…அல்லது 2019 தேர்தல் போல தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கலாமா?.. என்ற ஆழ்ந்த யோசனையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் இருந்து வந்தது. ஆனால் தற்போது அதன் பார்வை அதிமுகவை நோக்கி திரும்பியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்த டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிர்ச்சி அளிப்பது போல் பாஜக தனது வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்து இருப்பதுதான்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே யார் யார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பார்கள் என்று தெரியாத நிலையில் தமிழக பாஜக தலைமை கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான தேர்தல் பணிகளை தொடங்கியும் விட்டது.

அதாவது நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இந்த ஒன்பது தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது உறுதி. அவற்றைத் தவிர வேறு தொகுதிகளை கூட்டணி கட்சிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதை கமலாலயம் மறைமுகமாக சுட்டிக்காட்டியும் இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரமாக தமிழக பாஜகவின் இந்த பட்டியலில் தென்காசி தனித் தொகுதியும் இடம் பிடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தென்காசியில் போட்டியிட திட்டமிட்டு இருந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல அமைந்துவிட்டது. இத் தொகுதியில் பாஜக நிர்வாகியும் பிரபல தொழிலதிபருமான தென்காசி ஆனந்தன் என அழைக்கப்படும் ஆனந்தன் அய்யாச்சாமியை வேட்பாளராக களமிறக்க பாஜக முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இவர் தமிழக பாஜகவின் அயல்நாட்டு அணிகள் பிரிவின் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். ஸ்டார்ட் அப் தென்காசி என்னும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டதாக கூறப்படும் ஜோஹோ என்னும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவு தென்காசி ஆனந்தனுக்கு உள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தனது X பக்கத்தில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், “பிஜேபி சார்பாக தென்காசியில் களமிறங்குகிறார், தொழிலதிபர் ஆனந்தன் அய்யாசாமி. தென்காசி கிடைக்காததால் அதிமுக பக்கம் செல்கிறார், டாக்டர் கிருஷ்ணசாமி” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான், தமிழக பாஜகவுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு அதிரடி நடவடிக்கையிலும் இறங்கி இருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதிய விவசாயிகளான கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோரின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை சேலம் பாஜகவின் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் 2020ம் ஆண்டு கொலை மிரட்டல் விடுத்து அபகரித்துக் கொண்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஆத்தூர் காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகளும் உள்ளன.

இந்த நிலையில் விவசாயிகள் இருவரும் ஏராளமான கருப்பு பணம் வைத்து இருப்பதாக அமலக்கத்துறையிடம் குணசேகரன் அளித்ததாக கூறப்படும் புகாரின் பேரில் அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கண்ணையன், கிருஷ்ணன் இருவருக்கும் சென்னை அமலாக்கத்துறை சில மாதங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனில் விவசாயிகளின் சாதியை குறிப்பிட்டு இருந்ததுதான், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரை சென்று பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், “சேலம் ராமநாயக்கன் பாளையம் தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் பாஜக பொறுப்பாளர் குணசேகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும்! அமலாக்கத்துறை கடிதத்தில் சாதியின் பெயர் குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது” என்று கொந்தளித்ததுடன் தனது கட்சியின் விவசாய பிரதிநிதிகளை சம்பந்தப்பட்ட கிராமத்திற்கே அனுப்பி பாதிக்கப்பட்ட பட்டியல் இன விவசாயிகளை சந்திக்க வைத்தும் இருக்கிறார்.

அப்போது அவர்கள் இருவரும் தங்களது நிலத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி குணசேகரன் மேற்கொண்டதாக கூறப்படும் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்ததை வீடியோவாக எடுத்து அதை தனது X வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டும் உள்ளார்.

மேலும், சேலம் பாஜக மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமூக விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் புதிய தமிழகம் கட்சி… என்றும் அந்த வீடியோ காட்சிக்கு தலைப்பிட்டும் இருக்கிறார்.

இந்த நடவடிக்கையின் மூலம் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக பாஜகவுக்கு எதிராக தனது குரலை உரக்க எழுப்பி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால்தான் அவர், அதிமுக கூட்டணியில் இணைந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பாஜகவுக்கு சறுக்கல்?

பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐந்து முறை தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு இருந்தாலும் அவர் ஒரு தடவை கூட வெற்றி பெற்றதில்லை என்பதுதான் உண்மை. எனினும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு, 1996ல் தனித்தும், 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேநேரம் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி எதுவும் இல்லை என்றாலும் தென் மாவட்டங்களில் தென்காசி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அது பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது வெற்றி வாய்ப்புக்குரிய சூழலையும் ஏற்படுத்தும்.

“இதனால் பாஜகவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் கூட, கூட்டணி கட்சிகளில் ஒன்றை தமிழக பாஜக தவற விடுவது தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஒரு சிறிய சறுக்கலாக அமையலாம்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 257

0

0