நீலகிரி மாவட்டத்திற்கு நீடிக்கும் ரெட் அலர்ட்..! தேனி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

8 August 2020, 1:42 pm
nilgiri rain - updatenews360
Quick Share

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி மலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, குந்தா, தங்காடு, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அம்மாவட்டமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மலை மாவட்டம் என்பதால், நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல், வெள்ளப் பாதிப்பு உள்ளிட்டவற்றையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 36

0

0