அதி தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : 145 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை..!!

24 November 2020, 4:14 pm
nivar cyclone - updatenews360
Quick Share

சென்னை : தீவிர புயலாக கரையை கடக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிவர் புயல், தற்போது அதி தீவிர புயலாக உருமாறி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், தற்போது படிப்படியாக வலுவடைந்துள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் தாக்கத்தினால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் எச்சரிக்கையினால், பாதிப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புயல் காரணமாக, பேருந்து மற்றும் ரயில்களின் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீவிர புயலாக கரையை கடக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிவர் புயல், தற்போது அதி தீவிர புயலாக உருமாறி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிவர் புயல் அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே நாளை மாலை கரையை கடக்கும் என்றும், அடுத்த 12 மணிநேரத்தில் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 20

0

0

1 thought on “அதி தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : 145 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை..!!

Comments are closed.