போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை..! ஆதாரத்துடன் விளக்கமளித்த காவல்துறை..!!

15 February 2020, 7:54 am
CAA Romours- updatenews360
Quick Share

சென்னை : நேற்று நடந்த சிஏஏ போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை என சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் சில, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், இதை இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கவில்லை. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். உடனே, கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்டனர். பதற்றமான சூழல் நிலவியதை பயன்படுத்தி, சிலர் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், நிலமை மேலும் மோசமடைந்தது. கல்வீச்சில் காவல் இணை ஆணையர் விஜயகுமாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல், போராட்டக்காரர்களை கலைந்து போகச்செய்ய போலீசார் அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதையடுத்து லேசாக தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, அப்பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து குழுமியதால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தகவல் அறிந்து காவல் ஆணையர் விஸ்வநாதன், இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தினார். இது இரவிலும் தொடர்ந்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்த தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேராட்டங்கள் நடைபெற்றன. மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டன.

இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியில் 70 வயது முதியவர் இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சென்னை நகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இயற்கையாக மரணமடைந்தவரை சிஏஏ போராட்டத்தில் இறந்ததாக சிலர் தவறான செய்திகளை பரப்புவதாகவும் யாரும் இதை நம்ப வேண்டாம் என காவல்துறை விளக்கமளித்துள்ளது.