வேட்பாளர்களை கடத்தும் திமுக… கமலை தொடர்ந்து கதறும் சீமான் : தேர்தலில் மோதிப் பார்க்கலாமா..? ஸ்டாலினுக்கு சவால்..!!

Author: Babu Lakshmanan
27 September 2021, 6:32 pm
kamal -seeman - stalin - updatenews360
Quick Share

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் மிரட்டி வருவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இருகட்ட தேர்தல்

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இரு அணிகளாகவும், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்குகின்றன. எனவே, 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால், வாக்குகள் பிரிய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இது ஆளும் கட்சிக்கு பாதகமானதாக பார்க்கப்படுகிறது.

கமல் கதறல்

எனவே, சுயேட்சைகளையும், பிற கட்சி வேட்பாளர்களையும் திமுகவினர் மிரட்டி, வேட்புமனுக்களை வாபஸ் பெறச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் போட்டியிட்ட பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை திமுக பிரமுகர் மிரட்டி வேட்பு மனுவை திரும்பப் பெறச் செய்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Kamal - updatenews360

இந்த நிலையில், கமலைத் தொடர்ந்து சீமானும் திமுகவினரின் இந்த அட்டூழியத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஸ்டாலினுக்கு சீமான் சவால்

திலீபன் நினைவுநாளையொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர். பல இடங்களில் சிலரை கடத்திக் கொண்டு சென்று வைக்கின்றனர். எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை கொடுக்கின்றனர். எங்களைக் கண்டு ஏன் பயம் வருகிறது. தேர்தலில் மோதிப் பார்ப்போம்.

Seeman -Updatenews360

கான்ட்ராக்ட் பணி தருகிறேன், அரசு பணி தருகிறேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடம் திமுகவினர் பேரம் பேசுகின்றனர். ஆனால் எங்கள் கட்சி வேட்பாளர்கள் எதற்கும் பணியமாட்டார்கள். முடிந்தால் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுங்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 3-வது கட்சி எது என்பதில் காங்கிரஸ் கட்சியோடு போட்டி போட்டு நின்றது நாம் தமிழர் கட்சி. அதைப் போல, ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி குறிப்பிட்டு சொல்லும் வகையில் வாக்கு சதவீதத்தை பெறும், எனக் கூறினார்.

Views: - 152

0

0