நீட்‌ தேர்வு மாணவர்களின்‌ பாதுகாப்பிற்கு நிச்சயம்‌ குந்தகம்‌ விளைவிக்கும்‌ : ஓபிஎஸ் கருத்து…!!!

11 June 2021, 8:04 pm
OPS Office Raid -Updatenews360
Quick Share

சென்னை : நீட்‌’ தேர்வு நடத்தப்படுவது என்பது மாணவர்களின்‌ பாதுகாப்பிற்கு நிச்சயம்‌ குந்தகம்‌ விளைவிக்கும்‌ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய இடைநிலைக்‌ கல்வி வாரியத்தால்‌ நடத்தப்படும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ ரத்து செய்யப்படும்‌ என மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களே அறிவித்துள்ள சூழ்நிலையில், இதனையொட்டி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ ரத்து என்று அறிவித்துள்ள நிலையில்‌, நீட் பயிற்சியை தொடர கல்வித்‌ துறை உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும்‌, மன வேதனையையும்‌ ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்‌, மத்திய இடைநிலைக்‌ கல்வி வாரியத்தால்‌ நடத்தப்படும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ ரத்து செய்யப்பட்டதையும்‌, அவர்களுக்கு மதிப்பெண்கள்‌ வழங்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதையும்‌ சுட்டிக்காட்டி, இந்த முடிவைத்‌ தான்‌ தமிழ்நாடு அரசும்‌ எடுத்திருக்கிறது என்று தெரிவித்து, இதன்‌ அடிப்படையில்தான்‌. உயர்‌ கல்வியில்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌ என்று கூறியிருந்தார்‌.

இந்த முடிவு கல்வியாளர்கள்‌, ஆசிரியர்கள்‌, பெற்றோர்கள்‌ மற்றும்‌ மருத்துவ வல்லுருர்கள்‌ ஆகியோர்‌ தெரிவித்த கருத்துக்களின்‌ அடிப்படையிலும்‌, மாணவர்களின்‌ பாதுகாப்பினை மனதில்‌ வைத்தும்‌ எடுக்கப்பட்டது என்றும்‌ தெரிவித்து இருந்தார்‌. மேலும்‌, பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ எந்தக்‌ காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதோ, அந்தக்‌ காரணங்கள்‌ ‘நீட்’ போன்ற நுழைவுத்‌ தேர்வுகளுக்கும்‌ பொருந்தும்‌ என்று தெரிவித்து, ‘நீட்‌’ போன்ற நுழைவுத்‌ தேர்வுகளை ரத்து செய்யுமாறு வலியறுத்திய மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ அடிப்படையில்‌ உயர்‌ கல்வி மாணவர்‌ சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தார்.

நீட்‌ உட்பட உயர்‌ கல்விச்‌ சேர்க்கைக்கான நுழைவுத்‌ தேர்வுகள்‌ அனைத்தும்‌ ரத்து செய்யப்பட்டு, பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ அடிப்படையில்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெற வேண்டும்‌ என்பதுதான்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ உறுதியான நிலைப்பாடு. இதனை வலியுறுத்தி நானும்‌ மாண்புமிகு பாரதப்‌ பிரதமருக்கு கடிதங்களை எழுதியுள்ளேன்‌.

இந்தச்‌ சூழ்நிலையில்‌ ‘நீட்‌’ பயிற்சியை தொடர கல்வி துறை உத்தரவிட்டு இருப்பதாகவும்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ “நீட்‌” தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள்‌ மீண்டும்‌ துவக்கி உள்ளதாகவும்‌ செய்தி வெளியாகியுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டதோ இந்தக்‌ காரணம்‌ ‘நீட்‌’ உள்ளிட்ட நுழைவுத்‌ தேர்வுகளுக்கும்‌ பொருந்தும்‌ என்பதில்‌ யாருக்கும்‌ மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. கொரோனா நோய்த்‌ தொற்று பரவல்‌ அதிகமாக இருக்கின்ற காரணத்தையொட்டி, பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகளே ரத்து செய்யப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில்‌, ‘நீட்‌’ தேர்வு நடத்தப்படுவது என்பது மாணவர்களின்‌ பாதுகாப்பிற்கு நிச்சயம்‌ குந்தகம்‌ விளைவிக்கும்‌.

இப்பொழுது அரசு பள்ளிகளில்‌ ‘நீட்‌’ தேர்வு பயிற்சியை நடத்துவதன்‌ மூலம்‌ “நீட்‌” தேர்வு நடத்தப்படும்‌ என்று தமிழ்நாடு அரசே நினைக்கிறதோ என்ற சந்தேகம்‌ மாணவர்கள்‌ மத்தியில்‌ நிலவுகிறது. கொரோனா தொற்றால்‌ அதிகம்‌ பேர்‌ பாதிக்கப்பட்டுள்ள இந்தச்‌ சூழ்நிலையில்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பயிற்சி பெறக்கூடிய நிலையில்‌ ஏழையெளிய குடும்பங்களைச்‌ சார்ந்த மாணவ, மாணவியர்‌ மன நிலை இருக்கிறதா, அதற்கான வசதிகள்‌ அவர்களுக்கு இருக்கிறதா என்பதெல்லாம்‌ மிகப்‌ பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தற்போதைய சூழலில்‌ ‘நீட்‌’ உள்ளிட்ட நுழைவுத்‌ தேர்வுகளை சந்திப்பது என்பது மாணவ, மாணவியருக்கு, குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு மிகப்‌ பெரிய சவால்‌.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ தனிக்‌கவனம்‌ செலுத்தி, பன்னிரெண்டாம்‌. வகுப்பு மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மருத்துவக்‌ கல்வி உட்பட அனைத்து உயர்‌ கல்விக்கும்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும்‌, இலவச ‘நீட்‌’ பயிற்சி என்று சொல்லி மாணவ, மாணவியர்‌ மத்தியில்‌ குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 86

0

0

Leave a Reply