நதியில் வெள்ளம்… கரையில் நெருப்பு… இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு : ஓபிஎஸ்ஸால் சட்டப்பேரவையில் ‘கலகல’!!!
Author: Babu Lakshmanan28 August 2021, 12:42 pm
வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த விளக்கத்தினால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
திமுக ஆட்சியமைந்த பிறகு முதல்முறையாக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழக
சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், நடந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது, நதியில் வெள்ளம், கரையில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு இதுவே என் நிலை என்று சிவாஜி கணேசன் நடித்த தேனும் பாலும் படத்தின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியவில்லை என்று கூறினார்.
மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எனது நிலை என்ன என்பது அவை முன்னவருக்குத் தெரியும் என்று கூறியதால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதைத் தொடர்ந்து, வேளாண் சட்டம் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்ப, ” வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், அது தொடர்பாக தீர்ப்பு வெளிவந்த பிறகே பேச முடியும்,” என்று பதிலளித்தார்.
0
0