அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை திமுகவால் பொறுக்க முடியவில்லை : விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை… ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்

Author: Babu Lakshmanan
18 October 2021, 4:45 pm
eps ops - updatenews360
Quick Share

அதிமுகவின் பொன்விழாக் கொண்டாட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையை திமுக அரசு ஏவி விட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, புதுக்கோட்டை வடக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான டாக்டர்‌ விஜயபாஸ்கர்‌, அவர்கள்‌ தொடர்புடைய இடங்களிலும்‌, அவரது உறவினர்கள்‌ வாழும்‌ வீடுகளிலும்‌ லஞ்ச ஒழிப்புத்‌ துறை சோதனை என்ற பெயரில்‌ திமுக அரசு, தனது பழிவாங்கும்‌ உணர்ச்சிகளை மீண்டும்‌ பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள்‌ மூலம்‌ தற்காலிக மகிழ்ச்சியைத்‌ தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ பொன்விழா கொண்டாடி வரும்‌ எழுச்சிமிகு தருணத்தில்‌, நேற்று (17.10.2021) தலைநகர்‌ சென்னையிலும்‌, மாநிலத்தின்‌ மற்ற பகுதிகளிலும்‌ நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக்‌ கண்டு மனம்‌ பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன்‌ காவல்‌ துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில்‌ கோரத்‌ தாண்டவம்‌ ஆடிக்கொண்டிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஆழம்‌ காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்‌; இந்த இயக்கம்‌ திமுக-வின்‌ முயற்சிகளால்‌ முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை கழக நிர்வாகிகள்‌ மீது என்னென்ன வழக்குகள்‌ போட்டாலும்‌, அவதூறு பரப்பினாலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எதிர்காலத்தில்‌ அடையப்போகும்‌ வெற்றிகளை யாராலும்‌ தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 262

0

0