சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் : மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 6:15 pm
sasikala- ops - updatenews360
Quick Share

மதுரை : சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி, 59வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ரூ. 4.5 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா பொதுத்துறை வங்கியில் இருந்து பெற்று, தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமதி மீனாள் அவர்களிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம், சசிகலாவை அதிமுக ஏற்குமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது :- அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.

அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மினி கிளினிக் போன்ற அனைத்து மக்கள் நல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்த கூடாது. தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி நாங்கள் போராடுவோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் அத்துமீறிய செயல்களால் எங்களுடைய வெற்றி மறைக்கப்பட்டு, அது அவர்களின் வெற்றியாக அறிவிக்கப்பட்டு விட்டது. திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள்.

காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது. அரசியல் இயக்கங்களை நடத்துகிறவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அது தொண்டனாக இருந்தாலும், தலைவனாக இருந்தாலும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு, எனக் கூறினார்.

Views: - 390

0

0