அமமுக தலைவர் ஆகிறாரா ஓபிஎஸ்…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!

Author: Babu Lakshmanan
28 October 2021, 4:12 pm
OPS - ammk - updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று, 4 ஆண்டு காலம் தண்டனை அனுபவித்து, விடுதலையாகி சென்னை திரும்பிய பின்னர் அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு எழுவதும், பின்னர் அடங்குவதும் வழக்கமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.

ஏமாற்றம்

பிப்ரவரி மாதம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா அறிவித்தார். ஆனால் அவர் அப்படிச் சொன்ன பிறகு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவர் வசித்து
தி.நகர் வீட்டின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

Sasikala Admit- Updatenews360

அப்போதுதான், சிறையில் இருந்து வெளியே வந்தபோது 23 மணி நேரம், வழி நெடுக தனக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு செட்டப் என்பதை அவர் புரிந்து கொண்டது போல தெரிந்தது. மேலும் கொரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக, கூறப்பட்டதும் அவருக்கு எந்த அனுதாபத்தையும் தமிழக மக்களிடம் பெற்றுத் தரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா மார்ச் 3-ம் தேதி அப்படியே ஜகா வாங்கினார். அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி இருக்கப்போவதாக ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதிமுகவில் இடமில்லை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி தோல்வி அடைந்தாலும் 75 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. இதில் அதிமுக மட்டுமே 66 இடங்களில் வெற்றி கண்டிருந்தது. அதிமுக ஒருங்கிணைந்து செயல்படாததால்தான், இந்தத் தோல்வி ஏற்பட்டது. எனது தலைமையில் செயல்பட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அபார வெற்றி கண்டிருக்கும், திமுக கூட்டணி தவிடுபொடியாகி போயிருக்கும் என்பதுபோல ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.

அப்போது மீண்டும் எப்படியாவது அவருக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் லேசாக துளிர் விட ஆரம்பித்தது. தனது ஆதரவாளர்களுடன் போனில் பேசி அதை ஊடகங்களுக்கும் ஆடியோவாக அள்ளி அள்ளி வழங்கினார்.

EPS - sasikala - updatenews360 (2)

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை அவர் அதிமுகவிலேயே இல்லை என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இதை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தன் வாயால் சொல்லட்டும் என்று தனது சித்தி சசிகலாவுக்காக வக்காலத்து வாங்கினார்.

அதிமுகவுக்கு எதிராக ஒரு கட்சியை தொடங்கி நாடாளுமன்ற, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் படுதோல்வி கண்ட தினகரன் இப்படி பேசியதைக் கண்டு அரசியல் ஆர்வலர்கள் அனைவருமே எள்ளி நகையாடினர்.

ரூட்டு மாறிய ஓபிஎஸ்

அதன்பின்பு சசிகலா மீண்டும் அமைதியானார். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி மரணம் அடைந்தபோது, சசிகலா நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது ஓ பன்னீர் செல்வத்தின் மனதில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ தெரியவில்லை.

sasikala - updatenews360

இந்த நிலையில்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் அதிமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றாததால் நான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்திருந்தால் இந்நேரம் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று அதே பழைய பல்லவியை பாட ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமன்றி தென்மாவட்ட மக்கள் அனைவருமே தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க அவர் ஒரு மாபெரும் சுற்றுப் பயணத்தையும் தொடங்கி இருக்கிறார்.

இதற்கிடையே சசிகலா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் உதவியுடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றப் போவதாக ஒரு தகவல் சில ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

கொளுத்திப் போட்டார்

அதை உண்மை என்று கூறுவதுபோல, அண்மையில் செய்தியாளர்கள், அதிமுகவில் சசிகலா மீண்டும் சேர்க்கப்படுவாரா?என்று கேள்வி எழுப்பியதற்கு ஓ. பன்னீர்செல்வம் அதுகுறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறி ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

OPS - Updatenews360

இது அவர் மனதில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவின் சமாதி முன்பாக தியானத்தில் ஈடுபட்டு தர்மயுத்தத்தை தொடங்கிய ஓ பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் கூறுகின்றனர்.

ஏனென்றால் அப்போது பேட்டியளித்த ஓபிஎஸ் இப்போது சசிகலா பற்றி 10% தான் உண்மைகளை சொல்லியிருக்கிறேன், மீதி 90 சதவீதத்தை நேரம் வரும்போது சொல்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்படி கூறியவர் எப்படி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்? என்ற சந்தேகம் எழுவதாகவும் அந்த நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

முதலமைச்சர் பதவியா..?

சரி, சமீபகாலமாக சசிகலா மீதான பார்வையில் ஓபிஎஸ்சின் மனம் எப்படி கருணை கொண்டதாக மாறியது?…சசிகலாவால் அதிமுகவுக்குள் மீண்டும் நுழைய முடியுமா?…என்பது பற்றி, அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதிலும் தனக்கு மதிப்பில்லை என்கிற உண்மையை ஓபிஎஸ் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்.

மேலும் கட்சி ஒற்றைத் தலைமையை நோக்கி, அதாவது எடப்பாடி பழனிசாமி வசம் செல்வதும் அவருக்கு கண்கூடாக தெரிகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் தனக்கு அதிமுகவில் இருக்கிற கொஞ்சநஞ்ச மதிப்பும் இல்லாமல் போய்விடும் என்று ஓபிஎஸ் கருதுகிறார். சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவந்து விட்டால் எடப்பாடி பழனிசாமியின் கை மேலோங்குவதை தடுக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

sasikala- ops - updatenews360

சில வாரங்களுக்கு முன்பு, சசிகலா பேசும்போது 2017ல் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கவே நான் விரும்பினேன் என்று சொன்னார். அதை ஓபிஎஸ் உண்மை என்று நம்பி விட்டதுபோலவே தெரிகிறது. மேலும் ஒரு வாரத்துக்கு முன்பு ஆளுநர் ரவியை தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் 1989ம் ஆண்டு சம்பவம்

அதேபோல் பாஜகவின் டெல்லி மேலிடம், தன்னை நம்புவதைவிட எடப்பாடி பழனிசாமியை அதிகம் நம்புவதாகவும் ஓபிஎஸ் நினைக்கிறார். இப்படிப் பல்வேறு குழப்பமான சூழ்நிலையில் இரட்டை மனதுடன் அவர் இருப்பதால்தான் சசிகலாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.

ஆனால் தலைமைக் கழக நிர்வாகிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக 5 சதவீதம் பேர் கூட
இருக்கமாட்டார்கள் என்பது ஓபிஎஸ்க்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படும் நிலைதான் உருவாகும்.1989-ல் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளை வைத்து அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று முன்பு முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் கனவு கண்டார். ஆனால் அதை அப்போது நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கு பின்பு புரிந்துகொண்ட ஜானகி அம்மாள் அதிமுகவை தொடர்ந்து நடத்திச் செல்ல ஜெயலலிதாவுக்கு வழி விட்டார்.

அதேபோல, சசிகலாவை வைத்து ஓபிஎஸ்சும், டிடிவி தினகரனும் அதிமுகவை கைப்பற்ற திட்டமிடுகிறார்கள் என்று கூறப்டுகிறது. இது ஒருபோதும் நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது. இந்த முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் சசிகலா அமமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க தினகரன் வழி விடலாம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமமுகவில் தலைவர் பதவி கிடைக்கவும் நல்ல வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் ஒரு பதவியில் இருப்பதை விட இதுவே சரியான முடிவாகவும், கவுரவமாகவும் இருக்கும் என அவருக்கு தோன்றலாம்.

அமமுகவுக்கு தலைவரா..?

பெங்களூரு சிறையில் இருந்தபோது சுகவாசியாக இருக்க 2 கோடி ரூபாய் சிறைத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் குற்றவாளி என்று தெரியவந்தால் சசிகலா மீண்டும் சிறை செல்ல நேரிடும். அப்போது ஓ பன்னீர்செல்வம் அமமுக
தலைவராக இருந்து கட்சியை சிறப்பாக வழிநடத்துவார் என்று அமமுகவினர் நம்புகிறார்கள்.

2017-ல் சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்தது பற்றி ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்கள் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். அதற்காக ஆயுள் முழுக்க ஒருவருக்கு அடிமையாகி கிடக்கவேண்டும் என்ற அவசியமில்லையே? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகின்றனர்.

இன்னொரு விஷயம். சசிகலா சிறைக்கு சென்றபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் அதிமுக செயல்பட்டது. அப்போது டெல்லி பாஜக மேலிடம் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க பெரும் முயற்சி மேற்கொண்டது.

OPS Advice- Updatenews360

இதைத்தொடர்ந்து சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் எந்தக்காலத்திலும் சேர்க்க மாட்டோம் என்று உறுதிமொழி அளித்தால் மட்டுமே நாம் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்படலாம் என்று ஓ பன்னீர்செல்வம் முக்கிய நிபந்தனை விதித்தார்.

அதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் இப்போது ஓபிஎஸ் அப்படியே ‘யூ டேர்ன்’ அடிக்கிறார்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 300

0

0