ஓபிஎஸ் மனைவி மறைவு : நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்… மருத்துவமனையில் திரண்ட அதிமுகவினர்

Author: Babu Lakshmanan
1 September 2021, 10:38 am
eps - stalin - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பு காரணமாக காலமானார். மனைவியின் மறைவை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையிலேயே இருந்து வருகிறார். மருத்துவ நடைமுறைகளை முடித்து விட்டு, விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.

ஓபிஎஸ் மனைவியின் மறைவையடுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை புறக்கணித்து விட்டு, பெருங்குடியில் உள்ள ஹெம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதேபோல, கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் மனைவி மறைவு குறித்த செய்தியை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலினும், ரோஜாப்பூ மாலையுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, மனைவியை பிரிந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மருத்துவமனைக்கு விரைய உள்ளார்.

Views: - 384

0

0