ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்… திமுக கேலிக்கூத்து… சைலண்ட்டாக அடுத்த டார்க்கெட்டை நோக்கி நகரும் அதிமுக…!!!

Author: Babu Lakshmanan
8 January 2022, 12:57 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வெற்றியை திமுக கொண்டாடுவது கேலிக்கூத்து என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மருத்துவப்‌ பட்டப்‌ படிப்புகளில்‌ அகில இந்திய ஒதுக்கீட்டில்‌, இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும்‌ என்று உச்ச நீதிமன்றம்‌ அளித்துள்ள தீர்ப்பின்மூலம்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ நீண்ட நாளைய இடைவிடாத கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தத்‌ தீர்ப்பு, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்‌ இளநிலை மற்றும்‌ முதுநிலை மருத்துவப்‌ படிப்புகளில்‌ அதிக அளவு இடங்களைப்‌ பெற வழி வகுத்துள்ளது.

இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ 340-வது விதியின்படி சமுதாய நிலையிலும்‌, கல்வி நிலையிலும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்‌ நிலைமைகளை ஆராய்ந்து அவர்களை முன்னேறச்‌ செய்வதற்கான முறைகள்‌ பற்றி வழங்கப்பட்ட பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ பிற்படுத்தப்பட்டவர்களுக்குப்‌ பல்வேறு நலத்‌ திட்டங்களை செயல்படுத்துவதில்‌
முன்னோடியாகத்‌ திகழ்ந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக அரசு
என்று சொன்னால்‌ அது மிகையாகாது.

இதற்கு எடுத்துக்காட்டாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதத்தில்‌ இருந்து 50 சதவீதமாக 1980-ஆம்‌ ஆண்டு புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ உயர்த்தப்பட்டது. இதன்‌ காரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்த மாணவ, மாணவியர்‌ தொழில்‌ கல்லூரிகளில்‌ அனுமதி பெறுவதிலும்‌, அரசுப்‌ பணிகளில்‌ வேலை வாய்ப்பினைப்‌ பெறுவதிலும்‌ அதிக அளவு பயன்பெற்று வருகின்றனர்‌.

1990-ஆம்‌ ஆண்டு வேலைவாய்ப்பில்‌ பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அளவினை 27 விழுக்காடு என நிர்ணயித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்ட போது, சமுதாய நிலையிலும்‌, கல்வித்‌ துறையிலும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்‌ முன்னேற்றத்திற்கு உதவுகின்ற வகையில்‌ ஆணை பிறப்பிக்க வேண்டும்‌ என்றும்‌, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதற்குப்‌ பதிலாக 50 விழுக்காடு என்பதை மத்திய அரசு கொள்கையாக ஏற்று அறிவிக்க வேண்டும்‌ என்றும்‌ மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ 30.09.1991 அன்று தீர்மானம்‌ நிறைவேற்றியவர்‌ இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌.

மண்டல்‌ குழு பரிந்துரைகள்‌ தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்‌, மொத்த ஒதுக்கீடு 50 சதவீத உச்ச வரம்பினை மீறாத வகையில்‌ அமைய வேண்டும்‌ என்று 16.11.1992 அன்று உத்தரவு பிறப்பித்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின்‌ முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும்‌ ஊறு நேரா வண்ணம்‌ எப்போதும்போல்‌, இனி வருங்காலம்‌ முழுவதிலும்‌ அரசுப்‌ பணிகளிலும்‌, கல்வி நிலையங்களின்‌ அனுமதியிலும்‌ 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில்‌ இருக்கத்தக்க வகையில்‌, இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தில்‌ விரைவில்‌ உரிய திருத்தம்‌ கொண்டுவரப்பட வேண்டும்‌ என்று மத்திய அரசை வலியுறுத்தி 9.11.1993 அன்று தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றியவர்‌ இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌.

இதனைத்‌ தொடர்ந்து, 1993-ஆம்‌ ஆண்டு தமிழ்‌ நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள்‌, பட்டியல்‌ சாதியினர்‌ மற்றும்‌ பட்டியல்‌ பழங்குடியினர்கள்‌ (கல்வி நிலையங்களில்‌ இடங்களையும்‌, அரசின்கீழ்‌ வருகின்ற பணிகளில்‌ நியமனங்களை அல்லது பதவிகளையும்‌ ஒதுக்கீடு செய்தல்‌) சட்டத்தை நிறைவேற்றி அதனை இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ ஒன்பதாவது அட்டவணையில்‌ இணைத்து 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை பாதுகாத்தவர்‌ சமூக நீதி காத்த வீராங்கனை இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌.

இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ வகுத்துக்‌ கொடுத்த பாதையில்‌ பயணித்துவரும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌, அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ்‌ வரும்‌ மருத்துவச்‌ சேர்க்கைகளில்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து தமிழ்‌ நாடு அரசின்‌ சார்பிலும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பிலும்‌ சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த சென்னை உயர்‌ நீதிமன்றம்‌, இந்தப்‌ பிரச்சனை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவினை அமைக்குமாறு 27.7.2020 அன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இன்றைய வெற்றிக்கு இது அடித்தளம்‌.

இதன்‌ தொடர்ச்சியாக, குழு அமைக்கப்பட்டு அதன்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌, மத்திய சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலத்‌ துறை அமைச்சகம்‌ 29.7.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில்‌, அகில இந்திய ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ நிரப்பப்படும்‌ 15 விழுக்காடு இளநிலை மருத்துவப்‌ பட்டப்‌ படிப்பிற்கும்‌, 50 விழுக்காடு முதுநிலை மருத்துவப்‌ பட்டப்‌ படிப்பிற்கும்‌, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும்‌ என்று உத்தரவிட்டது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தொடர்‌ வலியுறுத்தல்‌ ஒரு முக்கிய காரணமாகும்‌.

இந்த ஆணையை எதிர்த்து சிலர்‌ தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம்‌, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்‌ என்று ஆணை பிறப்பித்துள்ளது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தொடர்‌ போராட்டத்திற்கு, தொடர்‌ வலியுறுத்தலுக்குக்‌ கிடைத்த வெற்றி.

கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம்‌ மத்திய அரசில்‌ அங்கம்‌ வகித்து, இதற்காக ஒரு குரல்‌ கூட எழுப்பாத தி.மு.க. இதற்காக ஒரு துரும்பைக்‌ கூட கிள்ளிப்‌ போடாத தி.மு.க.; வாய்மூடி மவுனியாக இருந்த தி.மு.க.; சுயநலத்திற்காக பொதுநலத்தைத்‌ தாரை வார்த்த தி.மு.க., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ நீண்ட நாள்‌ போராட்டத்தினால்‌, வலியுறுத்தலினால்‌ கிடைத்த வெற்றியை தன்‌ வெற்றியாக பறைசாற்றிக்‌ கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.

இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ நிறைவேற்றிய தீர்மானமான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசு வேலைவாய்ப்பிலும்‌, கல்வி நிலையங்களிலும்‌, அகில இந்திய ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வரும்‌ மருத்துவச்‌ சேர்க்கையிலும்‌, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட வேண்டும்‌ என்ற கோரிக்கை நிறைவேறவும்‌, இட ஒதுக்கீட்டில்‌ இடம்பெறாத, பொருளாதாரத்தில்‌ பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்யவும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தொடர்ந்து குரல்‌ கொடுக்கும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 455

0

0